2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'புதிய அரசியல் யாப்பில் இலங்கை மதச் சார்பற்றது என்று பதியப்படும்போது முன்னேற்றம் அடையும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

புதிய அரசியல் யாப்பில் இந்த நாடு மதச் சார்பற்ற நாடு என்று பதியப்படும்போதே, இலங்கை முன்னேற்றம் அடையும் நிலைமை காணப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இந்துமத கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 31 கோவில்களுக்கு புனரமைப்புக்காக நிதி உதவி வழங்குதல் மற்றும் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் வெற்றி பெற்ற 238 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, சுமார் 41 இலட்சம் ரூபாய் நிதி கோவில்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய மதங்களுக்கும் அவற்றின் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
தற்போது புதிய அரசியல் யாப்பு வரையப்படுகின்றது. அந்த யாப்பிலாவது இலங்கை மதச் சார்பற்ற நாடு, அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கின்ற நாடு என்ற விடயங்கள்; பதிவு செய்யப்படும்போதே, இந்த நாடு முன்னோக்கிச் செல்லக்கூடிய நிலைமை ஏற்படும். இந்த அரசியல் யாப்பிலாவது அனைத்து மதங்களுக்கும் சமத்துவமான உரிமை வழங்கப்பட வேண்டும்' என்றார்.

'இந்தியாவில் 83 சதவீதமான இந்துக்கள் இருந்தும் கூட, அந்த நாடு மதச் சார்பற்ற நாடாகவே இருந்து வருகின்றது. அதேபோன்று, இலங்கையிலும் மதச் சமத்துவத்தன்மை ஏற்படுத்தப்படுமாயின், இந்த நாடு வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாறாக, ஒரு மதத்தை மாத்திரம் நாங்கள் முதன்மைப்படுத்துவது என்பது ஏனைய மதங்களை இரண்டாம் தர நிலைமைக்குத் தள்ளும் செயற்பாடாகவே அமைந்துள்ளது. முற்போக்கான அரசியல் திட்டமாக இருந்தால், மதச் சார்பற்ற தன்மை புதிய அரசியல் யாப்பில் இடம்பெற வேண்டும்.

பல்வேறு தரப்பினர் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி தங்களின் மதங்களைப் பரப்புவதற்காக ஏனையோரை தங்களின்  மதங்களுக்கு மாற்றிக்கொள்வதற்கான வழிகளை மேற்கொண்டு வருகின்றனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X