2025 மே 07, புதன்கிழமை

'மற்றவர்களிடம் பாதுகாப்பை கோர முடியாது'

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

சிறார்களுக்கும் பெண்களுக்கும் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ள தற்போதைய நிலையில் அவர்களை பெற்றோரும் உற்றா உறவினருமே பாதுகாக்க வேண்டுமே தவிர மற்றவர்களிடம் பெற்றோர் பாதுகாப்பை கோர முடியாது என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 45ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை விபுலானந்தா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'செல்லச் சிட்டுக்களின் கொண்டாட்டம்' எனும் தொனிப்பொருளில் சாரதா பாலர் பாடசாலையின் அதிபர் இந்திராணி புஸ்பராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பெற்றோர் தம் பிள்ளைகளை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை சித்தி பெற வைப்பதற்கு காட்டும் அக்கறை ஏனைய பரீட்சைகளில் காண்பிப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும். பெற்றோர் தாய் மொழிமூல பாலர் பாடசாலைகளில் சேர்ப்பதை விட ஆங்கில மொழிமூல பாடசாலைகளில் சேர்ப்பதற்கு அதிக கவனம் செலுத்துகின்றனர். ஜப்பான், தென்கொரியா, ஜேர்மனி போன்ற வளர்முக நாடுகளில் கல்வி கற்கும் புத்தகங்கள், தொழில்நுட்ப நூல்கள் எல்லாம் அவர்களது சொந்த மொழியில் தான் அதிக நூல்கள் உள்ளன.

எமது சொந்த மொழியில் நாம் கற்று எமது மொழியின் பாரம்பரியங்களை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு உதாரணமாக சுவாமி விபுலானந்தரை நினைவு கோருவது சிறந்தது.

மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் பின்னடைவில் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு நாம் ஒவ்வொருவரும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

குழந்தைகள் அவர்களின் திறமையைக் காட்டும்போது,அவர்களை தட்டிக்கொடுங்கள்,உலக மயமாக்கலில் அதிக போட்டிகளுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

ஓர் பிள்ளை கல்வியில் அதிஉச்ச அடைவு மட்டத்தைப் பெறுவதற்கு பாலர் பாடசாலைகள் குழந்தைகளின் திறன்களை மதிப்பீடு செய்து அவர்களோடு இசைந்து குழந்தைகளுக்கு விளையாட்டின் ஊடாக கல்வியை ஊட்ட வேண்டும்.போட்டி போட்டுக்கொண்டு அறிவைப் பெறுவதற்காக ஓடும் காலத்தில் பெற்றோர் தம்பிள்ளைகளின் மனிதநேயம் சார்ந்த மனப்பான்மைகளை வளர்க்க உதவ வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X