2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

;மாணவர் இடைவிலகலைக் கட்டுப்படுத்தினால் சமூகவிரோதச் செயற்பாடுகளை குறைக்க முடியும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவதைக் கட்டுப்படுத்தினால், சமூகத்தில் காணப்படும்; சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களையும் சமூக விரோதச் செயற்பாடுகளையும் குறைக்க முடியும் என மட்டக்களப்பு சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் திருமதி மஹபுன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.

கிராம மட்ட சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக சமூக நிகழ்ச்சிகளை நடத்தும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கூட்டம், காத்தான்குடிப் பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகுதல், இளவயதுத் திருமணம், இளவயதுக் கர்ப்பம், குடும்பப்பிளவு, தாய் வெளிநாடு செல்லுதல் போன்றவை தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், சமூகவிரோதச் சம்பவங்களுக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் வழிவகுக்கின்றன.

சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் தற்போது கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. ஆகவே, அவர்களின் பாதுகாப்பு, கல்வி பற்றிக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.  

'மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, கிரான், செங்கலடி ஆகிய பிரதேசங்களிலேயே மாணவர்களின் இடைவிலகல் கூடுதலாக இடம்பெறுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. பாடசாலைகளிலிருந்து மாணவர்கள்; இடைவிலகுவதைக் குறைப்பதற்கு கல்வி அமைச்சு தற்போது புதிய ஒழுங்கைக் கையாண்டு, அதற்கான சுற்றுநிரூபங்களையும் அனுப்பியுள்ளது.
துஷ்பிரயோகங்களுக்கு சிறுவர்கள் உள்ளாக்கப்படுவதையும் சமூக விரோதச் செயற்பாடுகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதையும் தடுத்து, அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும். இதில் கிராம மட்டத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் மற்றும் சமூக நிறுவனங்கள் அக்கறை காட்ட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X