2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

‘வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனியான பிராந்தியம் அவசியம்’

Thipaan   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா  

“தமிழ் பேசும் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதாக இருந்தால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு தமிழ் பேசும் பிராந்தியம் உருவாக்கப்படல் வேண்டும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை (22) மாலை நடைபெற்ற, கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“தமிழ் பேசும் மக்களுக்கான தனிப்பிராந்தியம் உருவாக்கப்படுமாக இருந்தால், எங்களுடைய மொழியை எங்களுடைய சமயங்களை எமது கலை, கலாசாரத்தை, பண்பாட்டை, பாரம்பரியத்தை பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும். அதற்காக, தனிப்பிராந்தியத்தை, அத்தியாவசியமான தேவை எனக் கருதுகின்றோம். 

தமிழ் பேசும் மக்களுக்கு, இந்த நாட்டில் நிரந்தரமாக எப்போதும் ஒரு தமிழ் பேசும் பிராந்தியம் இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால் தமிழ் பேசும் மக்களின் முக்கியமான உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவது அத்தியாவசியமெனக் கருதுகின்றோம். 

இதன் மூலமாக எவருக்கும் எந்த அநீதியும் இழைக்க நாங்கள் நினைக்கவில்லை. எங்களுடன் வாழ்கின்ற முஸ்லிம் மக்களும் இங்கிருக்கின்ற சிங்கள மக்களும் அவர்கள் திருப்தியடைந்து இப்பிராந்தியத்தில் வாழ வேண்டும்.  

வடக்கு, கிழக்கு இணைந்து தமிழ் பேசும் மக்களுக்காக பிராந்தியம் கிடைக்கப்பெறுகின்ற போது இங்கு வாழ்கின்ற முஸ்லிம், சிங்கள மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக என்னென்ன செய்ய வேண்டும். எந்த பாதுகாப்பு ஒழுங்குகள் செய்ய வேண்டுமோ, என்னென்ன சலுகைகள் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.   படித்த பண்பான ஒரு முஸ்லிம் முதலமைச்சரைக் கூட நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என, நான் பகிரங்கமாகக் கூறியிருக்கிறேன். இன்று எங்களது ஆதரவுடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸைச் சோர்ந்த ஒரு முஸ்லிம் முதலமைச்சர் இருக்கிறார். ஆகையால், இதை எல்லோரும் உனர்ந்து கொள்ள வேண்டும். 

நாங்கள் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்களைக் கவனத்தில் எடுத்து, நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய ஒழுங்குகளின் மூலமாக நாங்கள் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண வேண்டும். 

அந்தத் தீர்வை, ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பெறமுடியாது. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒருமித்து, எவரையும் எவரும் ஏமாற்றாமல் புரிந்துணர்வுடன் நல்லிணக்கத்துடன் செயற்பட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும்.   எமது மக்கள், தங்களது இறைமையின் அடிப்படையில் தமக்குரிய அதிகாரத்தினை எவ்வித தலையீடுகளுமின்றி சுதந்திரமாக நடாத்தக் கூடிய நிலைமை இந்த நாட்டில் உருவாக வேண்டும். எமது மக்கள் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X