2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'வெண்தாமரை இயக்கத்தை ஆரம்பித்து தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையின  மக்களுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று வெண்தாமரை இயக்கத்தை ஆரம்பித்து, பெரும்பான்மையின மக்கள் மத்தியில் மேற்கொண்ட தெளிவுபடுத்தலை தற்போதைய அரசாங்கமும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது எனக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தெற்கு வலயத்துக்கான  விவசாய உதவிப் பணிப்பாளர் காரியாலயம் திங்கட்கிழமை (16)  திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,' ஒற்றையாட்சி இல்லாவிட்டால், நாடு பிளவுபடும் என்று சிலர் கூறுகின்றனர். மாகாணசபை வரவு –செலவுத் திட்டத்தின்போது, தேசிய கொள்கை வகுப்புத் தொடர்பான சட்டமூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அச்சட்டமூலத்தை எந்த மாகாணசபையும் ஏற்கவில்லை. நாமும் அதைத் திருப்பி அனுப்பியதுடன், கால அவகாசத்தையும்; கோரியுள்ளோம்.

மத்திய அரசாங்கமானது அதிகாரக் குவிப்பை வைத்திருக்கக்கூடாது. மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் திரும்பப் பெறக்கூடாது என்று  அனைத்து மாகாணசபைகளும் தெரிவித்துள்ளது. ஒற்றையாட்சி இந்த நாட்டுக்கு பொருத்தம் இல்லை என்பதையே அது எடுத்துக்காட்டுகின்றது' என்றார்.

 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எந்தவிதக் கபடத்தனமும் இல்லாமல் செயற்பாடுகளை மேற்கொள்வதுடன், இந்த நாட்டில் இன ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்காகவும் பாடுபடுகின்றது.  

எமது பிரதேசத்தின் தனித்துவத்தை, எமது இனத்தின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் எந்தவிதக் கபடத்தனமும் இல்லாமல் செயற்படுவோம் என்று நாம் கூறியுள்ளோம்.

தற்போது மிக முக்கிய காலகட்டமாகும். சிறுபான்மையினச் சமூகங்கள் ஒன்றுபட்டு, ஒரே குரலில் ஒலித்திட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை தந்துள்ளார்கள். அந்த ஆணையை நாம்; சரிவரசந் செய்வதற்காக முயற்சிக்கின்றோம். இந்த முயற்சி சற்று எட்டிப்போகலாம். உடனடியாக இவற்றில் நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியம் இல்லை.

அரசியல் தலைவர்கள் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துக்களால் மட்டும் இவ்விடயத்திலிருந்து நழுவிச்செல்ல முடியாது. அவர்களுக்கு கடப்படாடு உண்டு. சர்வதேச சமூகத்துக்கு அவர்கள் பதில் கூற  வேண்டும் என்பதுடன், எமக்கு அளித்த வாக்குறுதிகளுக்கும் அவர்கள் கூற வேண்டும். அதேவேளை, அவர்களுக்கு உள்ள கஷ்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X