2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'வெப்பம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்'

Niroshini   / 2016 மே 05 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மக்களது சுற்றாடல் சார்ந்த பாவனைப்பிரச்சினையாலேயே வெப்பம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். எதிர்காலத்தில் இவ்வாறான நிலை ஏற்படாதிருக்க நாம் செயற்பட வேண்டும் என்று மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசியப்பாடசாலையில் நேற்று  நடைபெற்ற பொலித்தீனுக்கு பதிலீட்டுப் பொருட்கள் என்ற கண்காட்சியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பென்று நாம் பெருமைப்படுவதற்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மட்டக்களப்பு மாநகர சபையானது எமது மக்களது பாவனைக் குப்பைகளை உடனுகுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் பல பிரச்சினைகள் உருவாகும்.

மாநகர சபையின் குப்பை அகற்றும் அணி ஒரு நாள் வராவிட்டால் நாற்றம் எடுத்து விடும். அந்த வகையில் நரகம் இல்லாமல் நகரமாக இருப்பதற்கு மட்டக்களப்பு மாநகர சபை மேற்கொள்ளும் பணி முக்கியமானது.

இந்த இடத்தில் ஏன் நாங்கள் இதனைச் செய்யக்கூடாது மாநகர சபைதான் செய்யவேண்டும் என்றல்ல, அது உண்மையில் மக்களுடைய பணி. நம்முடைய வீடுகளுக்கு முன்னாலுள்ள காண்களை, பகுதிகளைச் துப்பரவுசெய்து மாநகர சபையின் பாரிய பொறுப்பை நாங்களும் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு உதவலாம்.

அந்த வகையில் மாநகர சபைக்கு நன்றி கூற வேண்டும். இந்தப் பொலித்தீன் பாவனை விடயத்தில் கூட மாநகர சபையானது இதனை முன்னெடுக்கும் வின்சன்ட் தேசியப்பாடசாலைக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது. அது போன்று மாநகர சபைக்கு உதவும் பணியில் மாணவர்களைப் பயன்படுத்துவதாகவே இதனைப் பார்க்கிறேன்.

அந்த வகையில், பொலித்தீன் பாவனையைக் குறைக்கும் செயற்திட்டத்தினை முன்னெடுக்கிறீர்கள். இது ஒரு சிறப்பானதொரு விடயமாகும்.

தற்போதைய சூழ்நிலையில், மக்களால் ஏற்படுத்தப்பட்ட சுற்றாடல் பிரச்சினைகள், செயற்பாடுகள் காரணமாகவே நாங்கள் இப்போது இந்த வெப்பம் உள்ளிட பல்வேறு பிரச்சினைகளை அனுபவிக்கின்றோம். நாம் இது போன்ற பிரச்சினைகளை எதிர்காலத்திலும் வளர்க்காமல் தடுத்து நிறுத்துவதற்கான வேலைகளில் நாம் ஈடுபட வேண்டும்.

இப்போது, கடந்த காலங்களில் இருந்த அன்றாடப் பாவனைப் பொருட்கள் இப்போது இல்லாமல் போய்விட்டன. அவற்றைப் பாவிப்பதற்கு வெட்கப்படாமல் நாம் பன், பனம், மரம், பிரம்பு போன்றவற்றினால் தயாரித்த பொருள்களைப் பாவனையில் ஈடுபடுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இவ்வாறான உற்பத்திப் பொருட்களில் ஈடுபடுபவர்கள் அத் தொழில்களைக் கைவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அது மிகவும் கவலையான விடயமாகும். எதிர்காலத்துக்காக நாம் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாது செய்ய பழகிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X