2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'வில்பத்துக் காணிகளை முஸ்லிம்களோ அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ அபகரிக்கவில்லை'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 16 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'வில்பத்துக் காணிகளை முஸ்லிம்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ அபகரிக்கவில்லை. இதை உணர்ந்துகொள்ள அரசாங்கத்துக்கு இரண்டு வருடங்கள் எடுத்துள்ளன. ஆனால், தற்போது முஸ்லிம்களின் வில்பத்துக் காணிகளை தொல்;பொருள் ஆய்வுக்கு வர்த்தமானிப் பிரகடனம் செய்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்' என கிராமியப் பெருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைக்க வேண்டும்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தியவர்கள் சிறுபான்மையின  மக்களேயாவர். எனவே, சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கா விட்டால், ஜனாதிபதி மற்றும் பிரதமரை அம்மக்கள் சந்தேகத்துடனேயே பார்ப்பார்கள்.
மேலும், சிறுபான்மையின  மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கா விட்டால், மீண்டும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவளிப்பார்களா என்பதும்  கேள்விக்குறியாக உள்ளது' என்றார்.

'எனவே, சிறுபான்மையின  மக்களின் பிரச்சினைகளைப் பேசிப் பேசி காலத்தைக் கழிப்பதை விடுத்து, உடனடியாகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம் எடுப்பதற்கு முன்னரே மக்கள் தீர்மானம் எடுத்து விட்டார்கள்.

குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கே இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இது ஒரு வேடிக்கையாக உள்ளது.

மேலும், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது.
 

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை மாற்ற வேண்டும் சிலர் என்று நினைக்கின்றனர். ஆனால், சிறுபான்மையின மக்களும் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாற்றாத வரைக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் மாற்ற முடியாது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சிறுபான்மையின் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நல்லாட்சி அரசாங்கம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X