2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மதுபானத்துக்காக சுமார் ரூ.400 மில்லியன் செலவு: சாள்ஸ்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 


மதுபானத்துக்காக மாதாந்தம் 400 மில்லியன் ரூபாய்க்கும் மேல் மட்டக்களப்பு மாவட்டத்தில் செலவாவதுடன், இந்த மாவட்டத்தில் 66 இற்கும் மேற்பட்ட மதுபானச்சாலைகள் இயங்குவதாக  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

மதுபானத்துக்காக இவ்வளவு பெரிய தொகை செலவாகின்றது என்றால், இங்கு வாழ்வாதாரத்தை எப்படி உயர்த்த முடியும்? அல்லது  எப்படி மாற்ற முடியும் என்று கேள்வி எழுவதாகவும் அவர் கூறினார்.

கெயார் சர்வதேச நிறுவனத்தின்; ஏற்பாட்டில்  நடைபெற்ற 'மாற்றத்தின் ஓர் அனுபவப்பகிர்வு' ஒன்றுகூடல்  மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால், போதைப்பொருள் மற்றும் மதுபானப்பாவனை, புகைப்பிடித்தல் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்படும்போது அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், சமூக அமைப்பு என்பன மேலோங்கிக்காணப்படும்.

ஆண், பெண் சமத்துவம் தொடர்ந்து பல வருடங்களாக பல்வேறு தரப்பினரால் பேசப்பட்டுவருகின்ற விடயம். என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆண், பெண் என்ற வேறுபாட்டுக்குரிய காரணம் தொழில் ரீதியாக ஆதிகாலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. 

ஆண் என்ன தொழிலைச் செய்யமுடியும், பெண்களால் என்ன தொழிலைச் செய்யமுடியும் என்ற பாகுபாட்டின் அடிப்படையில், பின்னர் அது சமூகமயமாக்கப்பட்டு வரலாற்றுக் குறிப்புகளூடாக மக்கள் மனங்களில் பதியப்பட்டுவரும் சிந்தனை என்றே நான் நினைக்கின்றேன்.

இன்று  இந்தச் சிந்தனையை மாற்றவேண்டிய தேவை உள்ளது. ஏனெனில், நவீன விஞ்ஞானத்தினூடாக ஆண்கள் மட்டும் செய்யக்கூடிய பல வேலைகளை பெண்களாலும் செய்யமுடிகின்றது. அதாவது, மனித உடலை மட்டும் நம்பியிருந்த பல தொழில்கள் இயந்திரங்கள் மூலமாகச்  செய்யக்கூடியதாக இருக்கின்றது. எனவே ஆண்;, பெண் என்ற வேறுபாடு தொழில்கள் என்ற அடிப்படையில் அவசியமற்ற ஒன்றாகும்.

பெண்கள் அந்தத் தொழிலின் காரணமாக வெளியில் செல்வதற்கும் சமத்துவமாக நடத்தப்படுவதற்கும் சமூகத்தில் அவர்கள் சரியான அந்தஸ்த்தை பெறுவதற்குமான சந்தர்ப்பம் இன்றைய விஞ்ஞானத்தின் மாற்றத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அந்த மாற்றத்தால் உருவாக்கப்பட்ட அந்த மாற்றத்தை அனுபவிப்பதற்கும் சமுதாயத்திலும் மத நம்பிக்கையிலும் காலநேரத்திலும் மாற்றம் ஏற்படவேண்டும்.
இப்படியான மாற்றம்; மக்களால்; ஏற்படுத்தப்படுதல் வேண்டும். மாற்றம் என்பது மற்றவர்களால் மட்டும் ஏற்படுத்தக்கூடிய ஒன்றல்லை.

ஒவ்வொரு தனி மனிதனும் மனரீதியாக ஏற்படுத்தும் மாற்றமே குடும்பம், சமூகம், மாவட்டம், நாடு, உலகத்தின் மாற்றமாகவும் ஏற்படுகின்றது. எனவே இந்த மாற்றம் மக்களால் முடியும். மக்கள் நினைத்தால் மாற்ற முடியாதது எதுவுமில்லை' என்றார். 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X