2026 மே 06, புதன்கிழமை

இளைஞர் வீட்டுத் திட்டம்; நாடு முழுவதும் இன்று ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதேச செயலக வீடு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று நாடு பூராகவும் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்நிகழ்வு இன்று காலை சுபவேளையில் அடிக்கல் நடப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு புதுக்குடியிருப்பில் மண்முனைப்பற்று பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி திருமதி பிரசாந்தினி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற பணிப்பாளர் ஏ.தவராசா, மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ஏ.ஜெ.கபூர், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற மாவட்ட உத்தியோகத்தர் திருமதி ஜே.ஆர்.கலாராணி உட்பட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற அதிகாரிகள்,இளைஞர் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் கீழ் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிராம அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்களிப்பு என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்பு திட்டத்தில் அரசாங்கத்தினதும் இளைஞர்களினதும் பங்களிப்புடன் மிக வறுமையில் உள்ள இளைஞர் கழக உறுப்பினருக்கு வீடு அமைத்துக்கொடுக்கப்படவுள்ளது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் 343 வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தில் 44 வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன.

இந்த வீடமைப்பு பணியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் நிலையினை புதுக்குடியிருப்பு வீடமைப்பு பெற்றுக்கொண்டதை கௌரவிக்குமுகமாகவே கிழக்கு மாகாணத்தின் தேசிய நிகழ்வு இங்கு நடத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .