2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

அடுத்த ஒரு மாதத்திற்குள் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும்: பிரதியமைச்சர் முரளிதரன்

Super User   / 2012 ஜூன் 13 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


இன்னும் ஒரு மாதத்திற்குள் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டு. மாவட்ட விரிவாக்கல் செயற்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு சுபராஜ் ஹோட்டலில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,

"அடுத்த ஒரு மாத காலத்திற்குள் கிழக்கு மாகாண சபை கலைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபையை கலைத்து விரைவாக தேர்தலை நடாத்த வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக முடிவெடுத்துள்ளார்.

தற்போது, ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். குறித்த பயணங்களை ஜனாதிபதி முடித்து வரும் போது இதற்கான தீர்க்கமான முடிவு எடுக்கப்படும். இந்நிலையிலேயே கிழக்கு மாகாண சபை தேர்தல் விரைவாக நடாத்தப்படும். கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றால் நிச்சயமாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே ஆட்சியமைக்கும்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அனைத்து கட்சிகளையும் எங்களுக்குள் உள்வாங்கி சேர்ந்து போட்டியிட வேண்டும் என்பதையே நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
இந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் விடயத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருப்பதை போன்று தமிழ் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று ரீதியாக என்று இல்லாதவாறு பாரிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் எதிர்வரும் 15ஆம் திகதி விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் 20 அமைச்சர்கள், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பணியாளர்களுமாக மொத்தம் 300 பேர் மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளனர்.

மட்டக்களப்புக்கு வருகை தரும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறப்பினர்கள் மட்டக்களப்பு மற்றும் கல்குடா தொகுதிகளில் எதிர்வரும் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் ரேடியாக கிராமங்களுக்கு கால் நடையாக சென்று மக்களின் பிரச்சினைகள், கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளவுள்ளனர்.

இந்த வேலைத்திட்டங்கள் தொடர்பான ஒரு ஆய்வை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோhம். மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இணைப்பாளராக விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தே அளுத்கமகே கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு இணைப்பாளர்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரை நாங்கள் மாவட்ட இணைப்பாளர்களாக நிமியத்திருக்கின்றோம். அந்த வகையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்த்திற்கு மகிந்தானந்த அளுத்கமகே இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் தலைமையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று வேலைத்திட்டங்களில் ஈடுபடவுள்ளனர். சனிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் 500 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைக்கவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட ரீதியாக விரிவாக்கல் செய்யும் திட்டம் தொடர்ந்து எமது கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது" என்றார். (படங்கள்: எம்.சுக்ரி, ஜிப்ரான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .