2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

அத்தை மகளை ஏமாற்றி ரகசியத் திருமணம்

Janu   / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம், கனககிரி தாலுகா, கண்ணேமாரடு கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் (வயது 35). இவர், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, பசவராஜுக்கு வேலை கிடைப்பதற்கு முன்பே, பி.எஸ்சி. படித்துள்ள தனது அத்தை மகளை அவர் காதலித்து வந்துள்ளார்.

இருவரும் அடிக்கடி பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்துள்ளனர். அப்போது, "திருமணம் செய்துகொள்கிறேன்" என்று ஆசை வார்த்தைகளைக் கூறி, பசவராஜ் தனது அத்தை மகளுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இவர்களது காதலை அறிந்த இருவீட்டுப் பெற்றோரும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால், திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், பசவராஜ் தனது அத்தை மகளுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதை அறிந்த அந்தப் பெண், உடனே தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தி வந்துள்ளார். அதற்குப் பசவராஜ், "ஆசிரியர் வேலை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்வோம்," எனக் கூறி மழுப்பியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பசவராஜுக்கு ஆசிரியர் பணியும் கிடைத்தது; அதன்பிறகும் அவர் திருமணத்தைத் தள்ளிப் போட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், தான் காதலித்து வந்த அத்தை மகளைத் திருமணம் செய்யாமல், பசவராஜ் வேறொரு பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண்ணுடனேயே பசவராஜ் தனியாகக் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதுபற்றிப் பசவராஜின் அத்தை மகளுக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இச்சம்பவம் குறித்து கனககிரி பொலிஸில்பசவராஜ் மீது பரபரப்புப் புகார் அளித்தார்.

அந்த புகாரில், "தன்னைக் காதலித்து, திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்துவிட்டு, இப்போது பசவராஜ் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார். அதன் பேரில் பொலிஸார், ஆசிரியரான பசவராஜ் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .