2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

அபிவிருத்திப் பணிகளுக்கான பெயர் பலகைகள், நினைவுக் கற்கள் இனந்தெரியாத நபர்களால் சேதம்

Kogilavani   / 2012 ஜூன் 18 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பிக்கப்படவிருந்த, திறக்கப்படவிருந்த அபிவிருத்திப் பணிகளுக்கான நினைவுக்கல் மற்றும் பெயர் பலகைகள் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இவை இன்று திங்கட்கிழமை திறக்கப்படவிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவற்றின் மீது பெயின்ட் பூசப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பையினால் 8 கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் திறக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல் மற்றும் பெயர் பலகைகள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்,

'எனது வேண்டுகோளின்பேரில் ஏறாவூரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பையினால் வழங்கப்பட்ட 8 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பித்துவைக்கப்படவிருந்தன. அத்துடன் பூர்த்திசெய்யப்பட்ட அபிவிருத்திப்பணிகளும் இன்று மக்களிடம் கையளிக்கப்படவிருந்தன.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவற்றின் மீது பெயின்ட் பூசப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்தி திட்டங்கள் என்னுடைய வேண்டுகோளின் பெயரில் இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளதால் அதற்கான பெயர்ப் பலகைகளில் எனது பெயரை அமைச்சர் உதுமாலெப்பை இணைத்துகொண்டார்.

முன்னர் குறித்த அரசியல்வாதி தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையை அவ்விடத்தில் வலுக்கட்டாயமாக அமைத்தபோதும் அமைச்சர் உதுமாலெப்பையினால் அவை அகற்றப்பட்டு இந்த நினைவுக்கல் மற்றும் பெயர்ப்பலகைகள் நடப்பட்டன.

உண்மையில் இந்த அபிவிருத்திப்பணிகள் யாரால் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் ஏறாவூர் பிரதேச மக்கள் நன்கு அறிவார்கள். அரசியலில் இருந்து எதனையும் செய்யாமல் யாரும் செய்யும் சாதனைகளுக்கு தனது பெயரை பொறித்துகொள்ள நினைக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் ஏறாவூர் மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான அரசியல்வாதிகள் இனியாவது இவ்வாறான விசமத்தனமான செயற்பாடுகளை விடுத்து மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும்' என தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .