2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

இலங்கை நிர்வாக சேவைக்கு தமிழ் மூல ஆட்சேர்ப்பு வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு இணக்கம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 30 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

இலங்கை நிர்வாக சேவைக்கு தமிழ் மூல ஆட்சேர்ப்பு விசேட போட்டிப் பரீட்சைக்கான 48 வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் இணக்கம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் காணப்பட்டது.

இந்த சந்திப்பில் அமைச்சு செயலாளர் பி.வி.அபேயகோனும் கலந்து கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவை தமிழ் மொழி மூலம் 48 வெற்றிடங்களையும் நிரப்புவதற்காக நடைபெற்ற விசேட தமிழ் மொழி மூல போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் படி 99 பேர் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் 43 பேர் மட்டுமே தெரிவாகியிருப்பது தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதேவேளை ஏனைய 5 வெற்றிடங்களுக்கும் ஆட்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டதையடுத்து அமைச்சர் இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

அமைச்சருடனும் செயலாளருடனும் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மேலும் தெரிவிக்கையில்...
 
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டுவரை பட்டம்பெற்ற பட்டதாரிகள் சிலர் பட்டதாரி பயலுநர்கள் ஆட்சேர்ப்பிலிருந்து ஏதோவொரு காரணத்தினால் விடுபட்டுள்ளார்கள். இதனால் உத்தேச நிரந்தர தொழில் வாய்ப்புகளையும் இழக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து மனிதாபிமான அடிப்படையில் அவர்களையும் பட்டதாரி பயலுநர்களாக உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டது.

இவர்கள் உரிய திகதிக்கு முன்னர் விண்ணப்பம் செய்திருந்தால் உள்வாங்கப்படுவார்கள் என்று உறுதி மொழியை அமைச்சர் இந்த சந்திப்பின் போது வழங்கியுள்ளார்.
 
மேலும் அண்மையில் கிராம சேவை அலுவலகர் பதவிக்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் 18-30 வயது எல்லை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்க சேவைக்கான ஆட்சேர்ப்பு வயது எல்லை 18-45 என்பதை அமைச்சரிடம் சுட்டிக்காட்டி ஆகக்குறைந்தது 35 வயதாக அதிகரிக்குமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் முன்வைத்த போதிலும் அமைச்சரவை தீர்மானம் என்பதால் அதில் மாற்றம் செய்ய முடியாத நிலை என அமைச்சர் மறுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .