2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

'தமது பாதுகாப்பின் நிமித்தம் புலம்பெயர்பவர்களை தடுக்கும் சக்தி எம்மிடம் இல்லை'

Kogilavani   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா, எம்.சுக்ரி, ரி.லோஹித்)
'வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து தமிழர்கள் புலம்பெயர்வதை விரும்பவில்லை. ஏனெனில் இதனால் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழர்களின் குடிசன மதிப்பீடு குறைகின்றது. ஆனால் தமது பாதுகாப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர்பவர்கள் போன்றோரை தடுக்கக் கூடிய சக்தியும் எங்களிடம் இல்லை. ஏனெனில் அவர்களுக்கான போதிய பாதுகாப்பை வழங்கும் வல்லமை இந்நாட்டின் எதிர்கட்சியினரான எங்களிடம் கிடையாது' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்பவர்கள் தொடர்பில்; அவுஸ்திரேலியா தூதுவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

 'கடந்த சில மாதங்களாக பலர், படகு மூலம் தமது உயிரை பணயம் வைத்து 20 நாட்களுக்கு மேலாக கடலில் பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலியாவை அடைந்துள்ளதாக அறிகின்றேன். இவர்களில் பலர் இந்நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு செல்வதாக அறியப்படுகின்றது.

உண்மையிலேயே இனம்தெரியாத ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டவர்கள், தேர்தல் காலங்களில் அரசாங்க கட்சிக்கு எதிராக செயற்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளனவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிக்கு பாடுபட்டவர்கள் போன்றோர் தங்களுக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தலின் நிமி;த்தம் அவுஸ்திரேலியாவுக்கு இவ்வாறு செல்கின்றனர் என அறியமுடிகின்றது.
 
கடந்த கால யுத்த சூழல் மற்றும் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின் ஏற்பட்ட சூழல் போன்றவற்றில் காணாமல் போனோர் சார்பாக இதுவரை எதுவித தகவல்களோ அல்லது ஆராய்வதற்கான தகுந்த குழுக்களோ, நடவடிக்கையோ இல்லாத நிலையில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களின் பாதுகாப்பு சார்பாக எந்த உறுதிப்படுத்தலையும் வழங்க முடியாத சூழல் எங்களுக்கு உள்ளது.

இந்நிலையில் தமது உயிரை பணயம் வைத்து நீண்ட கடற்பயணத்தை பல நாட்களாக மேற்கொண்டு அவுஸ்திரேலியாவை அடைந்தவர்கள் மீண்டும் தமது நாட்டுக்கு திருப்பி அனுப்புதல் என்பது மிகவும் வேதனையான விடயமாகும். அத்தோடு மனிதாபிமானமற்ற செயற்பாடாகவும் உள்ளது.
 
இவ்விடயம் தொடர்பாக அவுஸ்திரேலியா அரசாங்கம் தமது தீர்மானத்தை பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகின்றேன். பொதுவாக அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படுபவர் சூழ்நிலை எவ்வாறு அமையும் என்பதை எங்களால் கூறமுடியாது. ஆனாலும் அவுஸ்திரேலியா அரசாங்கம் ஆரம்பத்தில் கடல் மூலம் வருகை தந்தவர்களை பொறுப்பேற்றதன் காரணமாகவே பலர் செல்வதற்கு வழிவகுத்தது என்பது மாத்திரம் உண்மையாகும்.

எங்களை பொறுத்தவரை வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து தமிழர்கள் புலம்பெயர்வதை விரும்பவில்லை. ஏனெனில் இதனால் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழர்களின் குடிசன மதிப்பீடு குறைகின்றது. ஆனால் தமது பாதுகாப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர்பவர்கள் போன்றோரை தடுக்கக் கூடிய சக்தியும் எங்களிடம் இல்லை. ஏனெனில் அவர்களுக்கான போதிய பாதுகாப்பை வழங்கும் வல்லமை இந்நாட்டின் எதிர்கட்சியினரான எங்களிடம் கிடையாது.
 
எனவே மனிதநேய உணர்வுமிக்க அவுஸ்திரேலியா அரசாங்கம் தங்களிடம் புகலிடம் தேடி வந்தவர்களை திருப்பி தாய் நாட்டுக்கு அனுப்புவதை நிறுத்தி உதவ முன்வரவேண்டும் என வேண்டுகிறேன்.

புதிதாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோர முற்படுபவர்களை கடல் மார்க்கமாக செல்வதை தவிர்க்கும் வகையில் தங்கள் தூதரகம் மூலம் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவ ஏற்பாடு செய்தல் உகந்தது என்பதையும் தெரிவிப்பதுடன், தங்கள் நாட்டில் தஞ்சம் கோரி வந்தவர்களை திருப்பி அனுப்பாது புகலிடம் வழங்க முன்வருமாறு வேண்டுகின்றேன்' என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .