-எஸ்.எம்.எம்.முர்ஷித்
அரசாங்கத்தினால் மீனவர்களுக்காக வழங்கப்பட்ட மாதாந்த எரிபொருள் மானியத் திட்டம் உரிய மாதங்களில் தொடர்ச்சியாக கிடைக்காமையால் வாழைச்சேனை பிரதேச மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக படகு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக மீனவர்களின் நலன்கருதி அரசாங்கத்தினால் மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மாதாந்த எரிபொருள் மானியத் திட்டமானது மீனவச் சமூகத்திற்கு எரிபொருள் விலையேற்றப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டமாக அமைந்தது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் மீனவர்களுக்கான எரிபொருள் மானியத்திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்திற்குரிய எரிபொருள் மானியக் கூப்பனானது காலதாமதமாக மே மாதம் 17ஆம் திகதிக்குப் பிறகே மட்டக்களப்பு மாவட்டத் திணைக்களத்தினால் வாழைச்சேனை மீனவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அந்த மாதத்திற்குரிய மானியக் கூப்பன்கள் கிடைக்காமல் தாமதமாகக் கிடைப்பதால் வாழைச்சேனை பிரதேச படகு உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாக படகு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இம் மானியத் திட்டமானது ஒரு பலநாள் மீன்பிடிப் படகிற்கு மாதாந்தம் 31200 ரூபா வீதம் வழங்கப்பட்டு வருகின்றது. இப் பெறுமதிக்கு ஒவ்வொரு படகும் சுமார் 2500 லீற்றர் எரிபொருளினை கொள்வனவு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் வாழைச்சேனையில் உள்ள சகல படகுகளும் உரிய காலத்தில் துறைமுக எரிபொருள் நிலையம் மற்றும் தனியார் எரிபொருள் நிறப்பு நிலையங்களில் பணம் கொடுத்தும் கடன் அடிப்படையிலும் எரிபொருளினைப் பெற்று தொழிலில் ஈடுபட்டுவிட்டன (மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில்) இதனை உறுதிப்படுத்துவதற்கான மீன்பிடித் தரவுப் புத்தகம் துறைமுக முகாமையாளரினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது காலதாமதமாக மானியக் கூப்பன் வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் மீனவர்களை 2500 லீற்றர் எரி பொருளினை பணம் செலுத்தி கொள்வனவு செய்தால்தான் மார்ச் மாதத்திற்காக வழங்கப்பட்டிருக்கும் மானியத்திற்குரிய எரிபொருளினைப் பெறமுடியுமென கடற்றொழில் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாழைச்சேனை மீனவர்கள் குறித்த மாதத்திற்குரிய மானியத்தைப் பெறுவதில் பல சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளனர். உரிய மாதத்தில் மானியக் கொடுப்பனவானது வழங்கப்பட்டிருந்தால் இப் பிரச்சினை எழுவதற்கு எந்த வாய்ப்பும் எழுந்திருக்காது. ஏனெனில் மீனவர்கள் உரிய மாதத்தில் 2500 லீற்றரையும் அதற்கு மேல்பட்ட அளவிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்துவிட்டார்கள்.
இப்பொழுது இம் மீனவர்களுக்கு மானியக் கூப்பன் பெறுமதிக்குரிய எரிபொருள் மாத்திரமே வழங்கப்பட வேண்டியுள்ளது. இதனால் மீனவர்களின் உரிமை மறுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றது. இது தொடர்பாக கடற்றொழில் திணைக்கள உயர் அதிகாரிகளிடமும் மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர், மீன் பிடி அமைச்சரிடமும் கலந்துரையாடியும் தங்களுக்கு எந்தவித தீர்வுகளும் கிடைக்கவில்லை என்று வாழைச்சேனை மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.