2026 மே 09, சனிக்கிழமை

மாணவர்கள் பாடசாலை செல்வதை அறிவதற்கு ஊட்ட பிரதேச வரைபடம் உதவும்

Kogilavani   / 2013 ஜூலை 01 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


'ஒரு பிள்ளை பாடசாலைக்கு செல்கின்றதா இல்லையா என்பதை கண்டறிவதற்கு யுனிசெப் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊட்ட பிரதேச வரைபடம் உதவும்' என்று மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு வடக்கு மற்றும் மட்டக்களப்பு ஆகிய வலயங்களைச் சேர்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்காக நடத்தபட்ட விசேட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தந்த பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கக்கூடிய சிறார்களின் நன்மை கருதி யுனிசெப் நிறுவனம் கடந்த வருடம் பிள்ளை நேயப் பாடசாலைகளை மையமாகக் கொண்டு பிரதேச ஊட்டப் பாடசாலை வரைபட திட்டத்தினை அறிமுகப்படுதியிருந்தது.

யுனிசெப் நிறுவனத்தின் கொள்கையின் அடிப்படையில் சகல பாடசாலைகளிலும் இத் திட்டம் அமுல்படுத்தபட வேண்டும் என்பதே நோக்கமாகும்.

இத் திட்டத்தினை உரியவாறு முறையாக அமுல்படுத்தினால் அப்பிரதேசத்திலுள்ள சகல பிள்ளைகளும் பாடசாலைக்கு செல்கிறார்களா? இல்லையா? என்பதை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த திட்டம் மிகவும் கஷ்டமாக இருக்குமென்று நான் ஏற்கனவே நினைத்திருந்தேன். ஒரு பிரதேசத்தில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று சிறார்கள் தொடர்பான விபரங்களை பெறுவதென்பது மிகவும் இலகுவான விடயம் அல்ல. ஆனால் இத் திட்டத்தினை அமுல்படுத்தினால் சகல மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்கமுடியும்.

கிராமப் புறங்களில் இத்திட்டத்தினை மிக இலகுவாக செயற்படுத்தமுடியும். ஆனால் சில கிராமப் புற மாணவர்கள் நகர்புற பாடசாலைகளை நோக்கிச் சென்றாலும் இவ் வரைபடத்தினை முறையாக செயற்படுத்தினால் எந்தெந்த பிரதேச மாணவர்கள் எந்தெந்த பாடசாலைகளுக்கு செல்கின்றார்கள் என்பதை அறிய முடியும்.

இத்திட்டத்தினை அந்தந்த பிரதேச செயலக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அமுல்படுத்துவது அவசியம். இவ்வாறு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தினால் கல்வியை ஒரு வலுவுள்ள மூலமாக மாற்றமுடியும். இத் திட்டத்தினை ஒரு வருடத்தில் மாத்திரம் அமுல்படுத்திவிட்டு கைவிட்டு விடக்கூடாது. தொடர்ந்தும் அடுத்தடுத்த வருடங்களிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டும்.

சிறுவர்களின் கல்வியில் கூடுதலான அக்கறை செலுத்திவருகின்ற யுனிசெப் நிறுவனம் 20 வீதமான நிதியினை பாடசாலையின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கும் 80 வீதமான நிதியினை கற்பித்தல் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குகின்றது என்றால் நாங்கள் கூடுதலாக சிறார்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

ஆனால் பாடசாலை அதிபர்களிடம் சென்று தேவைகள் தொடர்பாக கேட்டால் தங்களது பாடசாலைக்கு கட்டிட வசதிகள் வேண்டும் என்றும் தளபாடங்கள் வேண்டும் என்றே கேட்பார்கள். மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவித திட்டங்களையும் அல்லது தேவைகளையும் பற்றிக் கூற மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .