2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பரீட்சை வினா தாள்களில் குழறுபடி: ஆசிரியர் சங்கம் கவலை

Super User   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு கல்வி வலய பரீட்சை சபையினால் நடாத்தப்பட்ட மூன்றாம் தவணை பரீட்சை வினாத் தாள்கள் பல குழறுபடிகள் காணப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மூன்றாம் தவணை வினாத்தாள்கள் பரீட்சையின் பண்புசார் விருத்திற்கு முரணாக நடைபெற்றுள்ளதை கண்டிப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தெரிவித்துள்ளது.

இது தொடபாக கிளையின் செயலாளர் பி. உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் மூன்றாம் தவணை பரீட்சை பல குழறுபடிகளுக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது.  தரம் 10 மாணவர்களுக்கான வணிகக் கல்வியும் கணக்கீடும் மற்றும் தரம் 07 மாணவர்களுக்கான ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் முற்றிலும் பரீட்சையின் பண்புசார் விருத்திக்கு முரணாக காணப்பட்டதோடு, குழறுபடிகளுடன் நடைபெற்றுள்ளது.

இதனால் பெரும்பாலான மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பொறுப்பான அதிபர் ஆலோசகரும் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பளரும் பொறுப்புக் கூறலிலிருந்து விலகி தனியார் அச்சகத்தைக் குற்றம் சுமத்தியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் தவணைப் பரீட்சைகளில் ஏற்கனவே இடம்பெற்ற  குழறுபடிகள் தொடர்பாக மாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேளையில் மீண்டும் குழறுபடிகள் நடைபெற்றிருப்பது அதிகாரிகளின் அலட்சியத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் விஞ்ஞான வள நிலையம் நடாத்திய க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான இரசாயனவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்பட்டிருப்பதோடு பல மாணவர்களை பரீட்சைக்கு முன்பே விடைகள் மற்றும் புள்ளித் திட்டத்தையும் பெற்றுள்ளனர்.

கல்வி வலயத்தின் விஞ்ஞான வள நிலையத்தின் பொறுப்பாளரின் பொறுப்பு மற்றும் கடமைகள் தொடர்பாக வலயக் கல்வி பணிப்பாளர் வகை சொல்ல வேண்டும். இவ்வாறான சம்பவங்களினால் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பரீட்சைகள் தொடர்பாக நம்பகத் தன்மையைப் பற்றி பல ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்".

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .