2025 மே 01, வியாழக்கிழமை

இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கவில்லை; மட்டு. மீள்குடியேற்ற மக்கள் முறைப்பாடு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

வன்னியில், யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு மட்டக்களப்பில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் தாம் இன்னமும் தற்காலிக வீடுகளிலேயே வசித்துவருகிறோம் என்றும் இந்திய வீட்டுத்திட்டத்திலும் நாம் உள்வாங்கப்படவில்லை என மட்டக்களப்பு பிரஜைகள் சபையிடம் முறையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் தலைமையில் கல்லடியிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்திலேயே இந்த முறைப்பாடுகளை மீள்குடியேற்ற மக்கள் தெரிவித்தனர்.

இதன் போது, மட்டக்களப்பின் மண்முனைப்பற்று - ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவின், ஆரையம்பதி, தாளங்குடா, கிரான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வசித்துவரும் உள்ளுரில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களே மேற்கண்ட முறைப்பாட்டினை முன்வைத்தனர்.

'வன்னியில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு அரசினால் மீளக்குடியமர்த்தப்பட்ட போது தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு தகரம், கினிசெப் மரங்களும் வழங்கப்பட்டன. அக்கொட்டகைகள் 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. ஆனாலும் அந்தக் கொட்டகைகளிலேயே நாம் இன்னமும் வாழ்ந்து வருகிறோம்' என்று அமக்கள் தங்களது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

'இந்திய அரசினால் வழங்கப்படும் நிரந்தர வீடுகள் எங்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். இது தொடர்பில் அரச அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போதும் சாதகமான பதில்கள் வழங்கப்படவில்லை.

இந்திய வீட்டுத்திட்டத்திலோ வேறு வகையிலோ எங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துத் தருவதற்கு ஏற்பாடு செய்து தாருங்கள். அதே நேரத்தில் குடிநீர், மலசலகூடம், மின்சாரம் என அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகிறோம்' என்றும் அம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு வவுனியாவில் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் அனேகமானவர்கள் இவ்வாறான பிரச்சினைகள் பலவற்றினை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் மாதாந்தக் கூட்டத்தில், சிப்பி மடு பிரதேசத்தில் மீளக் குடியேறிய சிங்கள மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல், அவர்களுடைய இருப்பிட வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இது தவிரவும் பொது மக்கள் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள், பிரஜைகள் சபையின் பிரதேச குழுக்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 46 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட 4000 வீடுகளில் முறையே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2 ஆயிரம் வீடுகளும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்திற்கு தலா ஆயிரம் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .