2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஜோசப் பரராஜசிங்கத்தினை கொன்றது கூலிப்படையே: ஜோஸப் ஆண்டகை

Kogilavani   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார், எம்.எஸ்.எம்.நூர்தீன்

'படுகொலைசெய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தினை ஒரு கூலிப்படைதான் படுகொலைசெய்தது என்பதனை நான் திட்டவட்டமாக கூறுகின்றேன். அதனால்தான் இன்றுவரை அதற்கான விசாரணைகள் முற்றுப்பெறாமல் உள்ளது. இத்தினத்திலே இப்படுகொலை யாரால் செய்யப்பட்டது,எதற்காக செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்தவேண்டும் என அறைகூவல் விடுகின்றேன்' என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் எட்டாவது ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை மாலை (25) மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜோசப் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாங்கள் எமது பெரிய தலைவர்களை எமது வழிகாட்டிகளை இழந்து நிற்கின்றோம். அவர்களது இழப்பு பெரிய இழப்பு என்பது உண்மை. இவ்விழப்புகள் தற்கொலையாகவோ, படுகொலையாகவோ இருக்கலாம். அவ்வாறே ஜோசப்பரராஜசிங்கம் அவர்களது படுகொலை அமைந்தது.
ஜோசப்பரராஜசிங்கத்தினை ஒரு புனிதராகவே நான் பார்க்கின்றேன். ஏனென்றால் மற்றவர்களுக்காக வாழ்ந்து மடிந்தவர் அவர்.

ஜோசப்பரராஜசிங்கம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். பலர் அவரை மறக்கப்பட்ட ஒரு மனிதராக நினைக்கின்றனர். அவர் மறக்கப்படக்கூடியவர் அல்ல. இந்த மக்களுக்காக,தமிழ் மக்களுக்காக, மற்றவர்களுக்காக வாழ்ந்தவர் .அவர் மரணிக்கவில்லை.

ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகாலையானது ஒரு புனித நாளில், புனித ஸ்தலத்திலே வைத்து மேற்கொள்ளப்பட்டது. இவரது படுகொலை கூலிப்படையின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டது என்பதை நான் உறுதியாக, திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன். கூலிப்படையினால் மேற்கொள்ளப்பட்டதனாலேயே அவர்களது படுகொலை குறித்த விசாரணை இன்றும் முற்றுப்பெறாமல் உள்ளது.

அவரது நினைவு தினத்தில் அவரைப்பற்றி நினைவுகூர்ந்துக்கொண்டிருக்கும் இந்தவேளையில் அவரை யார் படுகொலைசெய்தார்கள், எதற்காக படுகொலைசெய்தார்கள் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுகின்றேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .