
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இராணுவத்தினர் ஒரு போதும் நிலைகொண்டிருக்கவில்லை என்றும் அங்கு படையினர் தம் வணக்க வழிபாடுகளுக்காக புத்தர் சிலை எதனையும் நிறுவி இருக்கவில்லை என்றும் மட்டக்களப்பு பிரிகேட் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் பௌத்த மக்கள் எவரும் இல்லாத போதிலும் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அங்கு நிலை கொண்டு முகாமிட்டிருந்த படையினரும் பொலிஸாரும் குறித்த புத்தர் சிலையை அங்குள்ள தனியார் காணியொன்றில் நிறுவி வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர் என்று வெளியான செய்தி குறித்தே படையினர் இந்த மறுப்பைத் தெரிவித்துள்ளனர்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பிள்ளையாரடிப் பகுதியில் பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினருமே நிலை கொண்டிருந்தனர் என்றும், இராணுவம் அங்கு எச்சந்தர்ப்பத்திலும் நிலைகொண்டிருக்கவில்லை என்றும் மட்டக்களப்பு பிரிகேட் இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர்.
மட்டக்களப்புப் பிள்ளையாரடியில் உள்ள தனியார் காணியொன்றில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலை கடந்த புதனன்று அது வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையிலிருந்து வெளியே எடுத்து வீசப்பட்டதில் சிலை வெவ்வேறு பாகங்களாக நொருங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.