2025 மே 01, வியாழக்கிழமை

சகலரும் சமத்துவத்துடன் வாழ அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது: பிரதமர்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 15 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இன, மத வேறுபாடுகளின்றி சகலரும் சமத்துவத்துடன் வாழ அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதென பிரதமர் தி.மு.ஜயரட்ண தெரிவித்தார். 

எதிர்காலச் சந்ததியினருக்கு ஐக்கியமென்ற சித்தார்ந்தத்தை ஊட்டி சிறந்ததொரு இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் திடசங்கற்பத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு அமிர்தகழி மாமங்கேஸ்வரர் கோவிலில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு  கூறினார்.

இங்கு இவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'வெளிநாடுகளிலிருந்து வரும் சிலரும் வெளிநாடுகளிலுள்ள வேறு சில சக்திகளும் இலங்கைக்கு எதிராக சில சதிகளை செய்து இன உறவை குழப்ப முனைகின்றனர். இதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

பாகிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளில் தினமும் உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன. ஆயுதம் கொடுத்தவர்களும் அதற்கு துணையாகவுள்ள மேற்கு நாட்டுச் சக்திகளும் அது பற்றி கேள்வி எழுப்புவதும் இல்லை. அது பற்றி அக்கறை கொள்வதும் இல்லை.

யுத்தத்தின்போது சில இழப்புக்கள் ஏற்படவில்லையென நான் கூறவில்லை. என்றாலும், எமது மக்கள் நிம்மதியோடு இன்று வாழ்கின்றார்கள்.
இங்கு இன மோதல்களை ஏற்படுத்தி நாட்டை பிளவுபடுத்த மேற்குலக சக்திகள் சூழ்ச்சிகளை செய்கின்றன. இதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமை இந்நாட்டு மக்களின் ஐக்கியத்திற்கு பலமாக அமைகின்றது.

பௌத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன.  பொங்கல் விழா இந்தியாவின் பாரம்பரியத்தை விளக்குகின்ற விழாவாகும். விவசாயப் பெருமக்கள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கின்ற ஒரு விழாவாகும். நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.  சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து அனுஷ்டிக்கின்ற இந்துக்களின் பாரம்பரியத்தை உலகுக்கு வெளிக்காட்டுகின்றது.

இந்து மதமும் பௌத்த மதமும் மிக நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது.  இரு மதங்களுமே இந்தியாவிலிருந்து வந்தவைகள்.  இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள உறவு மிகவும் வலுவாக இருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூவின ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் மிகவும் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றார்.

இந்த மண்ணில் பிறந்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் யதார்த்தத்தை புரிந்த ஒரு சிரேஷ்ட அமைச்சர் ஆவார். அவர் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதியுடன் கைகோர்த்து உறுதியுடன் செயற்படுகின்றார். பிரதேச அபிவிருத்தியில் பிரதியமைச்சர் முரளிதரனின் பங்கு அளப்பரியதாகும். இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நாடு என்ற ஐக்கியம் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எமது எதிர்காலச் சிறார்களை ஐக்கியப்படுத்த நாம் அனைவரும் வழிகாட்ட வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் பெருமளவு வாழ்கின்றனர். எனது தொகுதியான கம்பளை தொகுதியில் 20 சதவீதம் தமிழர்களும் 21 சதவீதம் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

எமது ஜனாதிபதி இஸ்ரேல், பலஸ்தீன் உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று அங்கு சமாதானத்தை ஏற்டுத்தும் நடவடிக்கைக்கு பங்களிப்பு செய்துள்ளார். எங்களது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை நிலைக்கச் செய்ய அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .