2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆரோக்கியமற்ற உணவுகளை பாடசாலைகளுக்கு விநியோகிப்போர் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 26 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஆரோக்கியத்திற்கு கேடான, சுகாதாரமற்ற, தரமில்லாத உணவுகளைத் தயாரித்து அவற்றினை  பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்க முற்படுவார்களேயாயின், அவர்கள்  கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின்  மேற்பார்வைச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஏறாவூர்க் கோட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள், பாடசாலைகளுக்கு உணவுகளை தயாரித்து விநியோகிக்கும் இடங்கள்  மற்றும் உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்வோர் மீது  எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து  திடீர்ச் சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

'மஹிந்த சிந்தனை' திட்டத்தின் கீழ் போஷாக்கு உணவு தயாரித்து பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்போருக்கான  விழிப்புணர்வுக் கூட்டம் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்  நேற்று சனிக்கிழமை  நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஏறாவூர்க் கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு  உணவு தயாரித்து விநியோகிப்பவர்களும் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலை நடத்துவோரும் பங்குபற்றினர்.

இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'உணவுகளை  தயாரித்து அவற்றை பாடசாலைகளுக்கு விநியோகிப்போர் சமூகப் பொறுப்புடன் நடக்க வேண்டும்.

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கும் உணவுகளின் தரம் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்;. இந்த நிலையில், உணவுகளை பாடசாலைகளுக்கு விநியோகிப்போர் சட்ட ஒழுங்கின் அடிப்படையில் மிகக் கடுமையாக கண்காணிக்கப்படவுள்ளனர்.

சுகாதாரமான,  போஷாக்கான, தரமான உணவுகளைத் தயாரித்து விநியோகிப்பதற்கு சகலரும் முயற்சிக்க வேண்டும். மாணவர்களின் உடல் நலத்திற்குத் தீங்கான உணவுகளையும் தரமற்ற மற்றும் போஷாக்கற்ற உணவுகளையும் தயாரித்து அப்பாவிப் பள்ளிச் சிறார்களை விபரீதத்தில் மாட்டிவிட எத்தனிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாடசாலைகளுக்கு உணவுகளை தயாரித்து விநியோகிப்போரும் பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகளை நடத்துவோரும் முதலில் தங்களைப் பரிசோதனை செய்து தகுதியான உடற்கூற்று மருத்துவ அறிக்கைகளைப் பெற்றிருக்க வேண்டும்.

உடற்கூற்று மருத்துவ அறிக்கையின் படி தகுதியற்ற ஒருவர் உணவு தயாரித்து விற்கவோ அல்லது பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை நடத்தவோ தகுதி அற்றவர் ஆவார்.

மேலும், ஒருவரின்  பெயரில் பெற்ற உடற்கூற்று மருத்துவ அறிக்கைகளை  ஆள்மாறாட்டம் செய்து இன்னொருவர் பயன்படுத்தி பாடசாலைச் சிற்றுண்டிச் சாலைகளில் உணவுகளை விற்கவோ அல்லது  அவற்றைக் கையாளவோ முடியாது. இது சட்டவிரோதமானதாகும்.

மேலும், உணவு தயாரிப்போர் முதலில் தன் சுத்தத்தைப் பேணவேண்டும். தூய்மையான உடை அணிந்து, தூய்மையான பாத்திரங்களைப் பாவித்து சுத்தமான இடத்தில் உணவு தயாரிக்க வேண்டும். அவ்வாறே உணவுகளை எடுத்துச்செல்லும்போதும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த விடயங்களைக் கண்காணிக்கும் கூட்டுப் பொறுப்பு உணவு தயாரிப்போர், அவற்றை விற்பனை செய்வோர் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் ஆகியோருக்கு உண்டு.

பாடசாலைச் சிற்றுண்டிச் சாலைகளில்  சோடா, டொபி போன்ற அதிகூடிய இனிப்புப் பண்டங்களும் சுவையூட்டிகள், நிறக்கலவைகள் என்பவை கலந்து தயாரிக்கப்பட்ட உணவுகளும் மை உள்ள கடதாசிகளில் உணவுப் பொருட்களை சுற்றிக்கொடுப்பதும் தடைசெய்யப்பட்டிருக்கின்றது' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .