2025 மே 02, வெள்ளிக்கிழமை

பூச்சியியல் நிபுணர்கள் ஏறாவூருக்கு விஜயம்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹூஸைன்


ஏறாவூரில் டெங்கு நுளம்புகள் பற்றி ஆய்வு செய்ய கொழும்பிலிருந்து பூச்சியியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று சனிக்கிழமை (24) தொடக்கம் மூன்று தினங்களுக்கு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம் தாரிக் தெரிவித்தார்.

சமீப ஒரு சில மாதங்களாக ஏறாவூரில் டெங்கு நோய்க்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து ஏறாவூரில் கூட்டிணைந்த டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மும்முரமாக்கப்பட்டுள்ளன.

இதன் ஓர் அங்கமாகவே ஏறாவூரில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதாக நம்பப்படும் கிணறுகள் மற்றும் நீர்த்தாங்கிகளைப் பரிசோதிக்க கொழும்பிலிருந்து விஷேட பூச்சியியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து வருகை தந்த சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஹேமந்த இந்தமல்கொட  தலைமையிலான குழுவினர் ஏறாவூரில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதாக நம்பப்படும் இடங்களைப் பரிசோதித்து வருகின்றனர்.

ஏறாவூரில் வாளியப்பா தைக்கா பகுதி, றஹுமானியா பாடசாலை வீதி, ஓடாவியார் வீதி, காயர் வீதி, விதானையார் வீதி, காதியார் வீதி, கிராம நீதிமன்ற வீதி, மிச்நகர் கிராமம், மீராகேணி கிராமம் ஆகிய பகுதிகளிலும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன என்றும் இந்த இடங்களுக்கு கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட விஷேட பூச்சியியல் நிபுணர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஆய்வுப் பரிசோதனையில் ஈடுபடுவார்கள் என்றும் வைத்திய அதிகாரி தாரிக் கூறினார்.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இன்று சனிக்கிழமை (24) தொடக்கம் மூன்று தினங்களுக்கு கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட விஷேட பூச்சியியல் நிபுணர்கள் தங்கியிருந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் அதன் பின்னர் விஷேட பூச்சியியல் நிபுணர்களின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் மேற்கொண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

சுகாதாரத் திணைக்களம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, ஏறாவூர் நகரசபை, பிரதேச செயலகம், கல்வித் திணைக்களம் உட்பட இப்பொழுது பொலிஸாரும் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுட்டு வருகின்றனர்.

கிணறுகளிலும் நீர்த்தாங்கிகளிலும் தான் நுளம்புகள் உற்பத்தியாகும் வீதம் கூடுதலாக இருப்பதால் அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். அதற்கு ஏதுவாக கிணறுகளில் விடப்படுவதற்கு மீன்குஞ்சுகள் போதாமல் இருக்கின்றன. அதனைப் பெறுவதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக டெங்கு நோய் பரவும் இடங்களில் ஒன்றாக மட்டக்களப்பு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X