2025 மே 02, வெள்ளிக்கிழமை

எமது ஊடக கலாசாரத்தை தமிழ்நாட்டு மக்கள் இரசிக்கின்றனர்: இந்திரஜித்

Kanagaraj   / 2014 மே 25 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

"எங்களுடைய வானொலி, தொலைக்காட்சிக் கலாசாரத்தை தமிழ்நாட்டு மக்கள் இரசிக்கின்றார்கள். எங்களது ஊடகத்துறையின் பெருமை உலகத் தமிழ் பேசும் மக்களிடையே மகோன்னத வரவேற்போடு சிறப்பித்துப் பேசப்படுகிறது.  ஆனால் துரதஷ்டவசமாக நாம் தென்னிந்திய தூய தமிழல்லாத பிறமொழி கலந்த பேச்சுவழக்கு  கலாசாரத்துக்கு சென்று கொண்டிருக்கின்றோம். இது கவலையளிக்கின்றது"  என சஜீ ஊடகக் கல்லூரியின் பணிப்பாளரும் சூரியன் எப்.எம்.செய்தி பிரிவின் முகாமையாளருமான முருகையா இந்திரஜித் தெரிவித்தார்.

சஜீ ஊடகக் கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், 'காரிகை' பெண்களுக்கான மாதாந்த சஞ்சிகை வெளியீடும் சனிக்கிழமை (24) மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

"நாங்கள் ஊடகத்துறையில் பிரவேசித்தபோது, எதிர்நோக்கிய கஷ்டங்களை புதிதாக ஊடகத்துறைக்குள் நுழைபவர்கள் எதிர்கொள்ளக்கூடாது என்ற சிந்தனைதான் இவ்வாறு ஒரு ஊடகக்கல்வி நிறுவனத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தது.

அதனடிப்படையில்தான் இன்று நீங்கள் ஊடகத்துறையோடு, சம்பந்தப்பட்ட பல்துறைசார்ந்த பயிற்சிகளையும் ஒருங்கே பெற்று வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்து கொண்டு சான்றிதழ்களைப் பெறுகின்றீர்கள். அதற்கும் மேலதிகமாக மும்மொழி அறிவும் உங்களுக்குப் புகட்டப்பட்டிருக்கின்றது.

அறிவிப்பு, செய்தி வாசிப்பு, செய்தித் தயாரிப்பு என்பவற்றுக்கும் மேலதிகமாக 'காரிகை' என்கின்ற சஞ்சிகையை நாம் வெளியிட்டுள்ளோம். இது முற்றுமுழுவதுமாக பெண்களுக்கானது. முன்னேறும் பெண்களுக்கான ஒரு வழிகாட்டலாகவும் முன்னுதாரணமாகவும் இச்சஞ்சிகை விளங்கும்.

வழமையான பெண்களுக்கான சஞ்சிகைகளைப் போன்று அழகுக் குறிப்புக்களையோ, சமையல் குறிப்புக்களையோ தாங்கி வராது. மாறாக வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடுபூராகவும் சீர்குலைந்திருக்கின்ற தமிழ்ப் பெண்களின் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை மீள நிலைநாட்டி அதனைப் பாதுகாக்கின்ற ஒரு பொறுப்பையும் இந்த சஞ்சிகை கொண்டிருக்கும்.

கலாசாரச் சீரழிவுகளைத் தடுத்து நிறுத்துகின்ற விடயத்திலே பெண்கள் மத்தியில் ஏற்படக்கூடிய விழிப்புணர்வுகளை மீள வலியுறுத்துகின்ற ஒரு சஞ்சிகையாக காரிகை மிளிரும்.

இதில் வெளிவருகின்ற ஆக்கங்கள் ஏனைய வெளியீடுகளில் பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது பிரதி செய்ததாகவோ ஒரு போதும் இருக்கக் கூடாது என்பதிலே நாம் மிகக் கவனமாக இருப்போம். சமகால நடைமுறை வாழ்க்கை அனுபவங்களைத் தாங்கிய முன்னுதாரணங்களையும் சாதனைகளையும் சுமந்து வரும் ஒரு பொக்கிஷமாகத்தான் இந்தச் சஞ்சிகை இருக்கும்.

எமது ஊடகக் கல்லூரியிலே கற்று முடித்தவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் முகமாக இணையத்தள வானொலி ஒன்றைத் ஆரம்பிப்பிக்கவுள்ளோம். அதற்கான பரீட்சார்த்த முயற்சிகள் யாவும் நிறைவு பெற்றுவிட்டன.

இதனை நாங்கள் உங்களுக்காகவே சமர்ப்பிக்கின்றோம். 24 மணி நேர ஒன்லைன் வானொலியாக அது இருக்கும். எனவே மட்டக்களப்புப் பிராந்தியத்திலிருக்கும் உங்களுக்கும் அந்த இணையத்தள வானொலியில் முழுமையான வாய்ப்புத்தரப்படும்.

எங்களது நுவரெலியா மற்றும் கொழும்பு ஊடகக் கல்லூரிகளில் அளிக்கப்பட்ட பயிற்சிகளுக்கும் மேலதிகமாக மட்டக்களப்பில் நீங்கள் சிறப்பான பயிற்சிகளைப் பெற்றுள்ளீர்கள் என்ற மகிழ்ச்சியான விடயத்தையும் நான் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றேன்' என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சஜீ ஊடகக் கல்லூரியில் 10 மாதங்கள் பல்துறை ஊடகப் பயிற்சிகளைப் பெற்ற 10 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், 'காரிகை' என்ற பெயரில் பெண்களுக்கான மாதாந்த சஞ்சிகையும், சஜீ ஊடகக் கல்லூரியின் பணிப்பாளரும் சூரியன் எப்.எம். செய்தி முகாமையாளருமான முருகையா இந்திரஜித்தால் வெளியிடப்பட்டது..













You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .