2025 மே 02, வெள்ளிக்கிழமை

அபிவிருத்திக்குழு கூட்டத்தை மாவட்ட செயலகத்தில் நடத்த வேண்டிய அவசியமில்லை: ஹிஸ்புல்லாஹ்

Menaka Mookandi   / 2014 மே 26 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
,மாணிக்கப்போடி சசிகுமார், ரி.எல்.ஜவ்பர்கான்

மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம். அக்கூட்டத்தை மாவட்ட செயலகத்தில் தான் நடத்த வேண்டுமென்பது சட்டமல்ல என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான முதலாவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணப்புக்குழுக் கூட்டம் கொக்கட்டிச்சோலையிலுள்ள கருணா அம்மான் கலாசார மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியசைமச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் தேசியக் கூடடமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், படை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்ட ஆரம்பத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில்தான் நடத்தப்படல் வேண்டும் மாவட்ட செயலகத்திற்கு வெளியே கூட்டத்ததை நடத்துவது பிழையான நடவடிக்கையாகும் என்று தமிழ் தேசியக் கூடடமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து பொருளாதார அபிவிருத்தி பிரதியசைமச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் என்றார்.

அத்துடன், மாவட்ட செயலகத்தில் தான் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்த வேண்டுமென்பது சட்டமல்ல. இதேபோன்று தான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூடடங்களையும் பிரதேச செயலகத்தில் தான் நடத்த வேண்டுமென்பதில்லை. அந்த பிரதேச செயலகப் பிரிவில் எங்கு வேண்டுமானாலும் நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இதர அமைச்சுக்கள் ஒதுக்கீடு செய்துள்ள நிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு இந்த வருடத்தில் எஞ்சியுள்ள மாதங்களில் செலவு செய்ய வேண்டும் என்பவை தொடர்பாகவும் இக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் திட்டங்களுக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .