2025 மே 02, வெள்ளிக்கிழமை

மலேரியா அற்ற இலங்கை விழிப்புணர்வு நடைபவனி ஊர்வலம்

Kogilavani   / 2014 மே 27 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தின்


'மலேரியா அற்ற இலங்கை' என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான விழிப்புணர்வு நடைபவனி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை(27) ஏறாவூர் நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடு தழுவிய ரீதியில் மாவட்டம் தோறும் இவ்வாறு மலேரியாத் தடுப்பு விழிப்புணர்வு நடைபனி ஊர்வலங்களை நடத்தி வருவதாக சர்வோதய இயக்க மலேரியாத் தடுப்புத் திட்ட அதிகாரி எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.

மலேரியா அற்ற இலங்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தாம் இந்த விழிப்புணர்வை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

மலேரியா தடுப்பு இயக்கம், சர்வோதய இயக்கம், சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து இந்த விழிப்புணர்வு நடைபனி ஊர்வலங்களை நடத்தி வருகின்றன.

மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எஸ். முருகானந்தம், சர்வோதய இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஈ.எல்.ஏ. கரீம், சர்வோதய இயக்க மலேரியாத் தடுப்புத் திட்ட அதிகாரி எஸ். சிவகுமார், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். சதுர்முகம், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம, மற்றும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள், மலேரியாத் தடுப்பு இயக்க உத்தியோகத்தர்கள், சர்வோதய விழிப்புணர்வூட்டல் தொண்டர்கள் என ஏராளமானோர் 'மலேரியா அற்ற இலங்கை என்ற இந்த விழிப்புணர்வு நடைபவனி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

நடைபவனி ஊர்வலத்தில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'பண்டைக் காலங்களில் பல உயிர்களைப் பலிகொண்ட மலேரியா நோயானது 1963 ஆம் ஆண்டு இலங்கையிலிந்து முற்றாக ஒழிக்கப்பட்ட போதிலும், எமது தொடர்ச்சியான அவதானமின்மையால் 1967 தொடக்கம் 1969 ஆகிய காலப்பகுதியில் மீண்டும் இலங்கையில் தலைதூக்கியிருந்தது.

அதனால் வருடாந்தம் அதிகமான மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்டிருந்தார்கள். ஆயினும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த  மலேரியாத் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில வருடங்களாக உள்நாட்டு மலேரியா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இருப்பினும் இலங்கையர்கள் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பும் போது மலேரிய நோய்த் தொற்றுக்கு உள்ளாகி நோய்க் காவிகளை இலங்கைக்குள் மீண்டும் கொண்டு வருகின்றனர்.

எனவே இது தொடர்பான அவதானமின்மையால் மீண்டும் மலேரியா ஆட்கொல்லி நோய் இலங்கைக்குள் பரவும் அச்சுறுத்தல் உள்ளது.
ஆகவே இது தொடர்பாக விழிப்புணர்வுடனும் அவதானத்துடனும் நடந்து கொள்வதன் மூலம் நாம் மலேரியா அற்ற  இலங்கையை உருவாக்குவோம்.

நீங்கள் அண்மையில் மலேரியா தொற்றுள்ள நாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பியிருந்தால் மலேரியாவிற்கான குருதிப்பரிசோதனை செய்து கொள்ளவும்.

நீங்கள் அடிக்கடி மலேரியா தொற்றுள்ள நாடொன்றிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்பவராயின் உங்கள் பயணத்திற்கு முன்னர் அதற்கான தடுப்பு மருந்தினை ஒரு வாரத்திற்கு முன் எடுத்துக் கொள்ளவும்.

நீங்கள் பயணம் மேற்கொள்ளும் நாடு மலேரியா தொற்று நோயுள்ள நாடாயின் நீங்கள் இலங்கையில் மலேரியா தடுப்பு இயக்க தலைமையகம், பிராந்திய மலேரியா தடுப்பு இயக்க நிலையங்கள், மற்றும் சர்வதேச விமான நிலையங்கள், ஏனைய அரசாங்க வைத்தியசாலைகளிலும் மலேரியாத் தடுப்பு மருந்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் மலேரியா தொற்றுள்ள நாடொன்றில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் மலேரியாத் தடுப்பு மருந்தினை வாரத்திற்கு ஒரு தடவை தவறாது உட்கொள்ளவும்,

மலேரியா நுளம்புகள் அதிகாலையிலும் இரவு வேளைகளிலும் அதிகமாக இருப்பதால் நுளம்புக் கடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மலேரியா நாடொன்றிலிருந்து நீங்கள் தாயகத்திற்குத் திரும்பினால் மலேரியாத் தொற்றுத் தடுப்பு மருந்தினை நான்கு வாரங்களுக்குத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளவும், மலேரியாவுக்கான குருதிப் பரிசோதனை செய்து கொள்ளவும். உங்களுக்கு மலேரியாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்'  என குறிப்பிடப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .