2025 மே 02, வெள்ளிக்கிழமை

'மட்டு. நகரில் கல்வியை முன்னேற்ற கல்விமான்கள் ஒத்துழைக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2014 மே 28 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு நகரில் பின்தங்கியுள்ள கல்வியை முன்னேற்றுவதற்கு இம்மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துக் கல்விமான்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பிரதிக் கல்வியமைச்சர் மோகன்லால் கிறேரு மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (27) வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'ஒரு காலத்தில் முதலாமிடத்திலிருந்த  மட்டக்களப்பு நகரின் கல்வி தற்போது பின்னடைந்துள்ளது. பின்னர் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அகில இலங்கையில் முதலாமிடத்தை பெற்றுள்ளது. இவ்வகையில் மட்டக்களப்பு கல்வி வலயம் 08ஆவது இடத்திலுள்ளது.

மட்டக்களப்பு நகரின் கல்வியை முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க  வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கல்விமான்கள் மட்டக்களப்பு நகரின்  கல்வி வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடவேண்டும்.

விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தை மேற்கொள்வதற்கு இலங்கையில் 250 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இப்பாடசாலைகளுக்கு இதற்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், கல்வியமைச்சருடன் நான் கலந்துரையாடி அவரை மட்டக்களப்புக்கு அழைத்து வந்து விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தை மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள இப்பாடசாலைகளை காண்பித்தேன். மேலும், கல்வியின் முன்னேற்றத்திற்கு அவருடன் பல விடயங்களை கலந்துரையாடி அவற்றை  எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எந்தச் சாதனைகளையும் படைக்க முடியாது. மட்டக்களப்பின் கல்விக்காக அனைவரும் தங்களது ஒத்துழைப்பை  வழங்க வேண்டும்' என்றார்.

இதேவேளை, இங்கு பிரதிக் கல்வியமைச்சர் மோகன்லால் கிறேரு  உரையாற்றுகையில்,

'கல்விக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றார். இந்தத் திட்டத்தில் ஒன்றாக நாடு பூராகவும் 250 பாடசாலைகள் விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தை மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பாடசாலைகள் இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், இதன் ஒவ்வொரு பாடசாலைக்கும் இதற்காக 03  மாடிக்கட்டிடம் மற்றும் தேவையான வசதிகள்  செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் மத்தியில் சிறந்த தொழில்நுட்ப அறிவை வழங்கி தொழில் திறமையுள்ளவர்களாகவும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாகவும் மாற்றுவதற்காக இந்த விஞ்ஞான தொழில்நுட்ப பாடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் மற்றும் அதற்கு தேவையான கணினி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

இவற்றின் மூலம் சிறந்த விஞ்ஞான தொழில்நுட்ப அறிவைப் பெற்று இந்நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .