2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் நகரசபைக் கூட்டத்தை பாசிக்குடாவில் நடத்துவதற்கு ஆட்சேபம்

Suganthini Ratnam   / 2014 மே 28 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

நகரசபைக் கட்டளைச் சட்டம் 25 (1) இன் பிரகாரம் சபைக் கூட்டத்தை அச்சபையின் அலுவலகத்தில்தான் நடத்த வேண்டும் என்ற கட்டளைச் சட்டத்தை மீறி, ஏறாவூர் நகர சபையின் கூட்டத்தை பாசிக்குடா விருந்தினர் விடுதியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதை தாம் ஆட்சேபிப்பதாக எறாவூர் நகர சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.பிரௌவ்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நகர சபையின் மாதாந்தக் கூட்டத்தை பாசிக்குடா விருந்தினர் விடுதியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதை தடுத்து நிறுத்துமாறு கோரி, அவர் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கும் மட்டக்களப்புப் பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளருக்கும் தொலைநகல் மூலம் அறிவித்துள்ளார்.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நாளை வியாழக்கிழமை 29.05.2014 இடம்பெறவிருக்கும் ஏறாவூர் நகரசபையின் 38ஆவது அமர்வுக்கான அழைப்பிதழ் இன்று புதன்கிழமைதான் எமக்கு செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும், சபைக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் விடுமுறை நாட்கள் தவிர்ந்த வார நாட்களில் கூட்டம் நடைபெறும் தினத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்பாக உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

21ஆம் திகதி செயலாளரினால் கையொப்பமிடப்பட்டு 27ஆம் திகதிதான் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நகரசபைக் கட்டளைச் சட்டம் 25(1) இன் பிரகாரம் சபைக் கூட்டத்தை அச்சபையின் அலுவலகத்தில்தான் நடத்த வேண்டும்.

நகரசபைக் கட்டளைச் சட்டத்தை மீறி ஏறாவூர் நகர சபையின் மாதாந்தக் கூட்டத்தை பாசிக்குடா விருந்தினர் விடுதியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏறாவூர் நகர சபை உத்தியோகத்தர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடலும் பிரியாவிடை வைபவமும் அதே இடத்தில், அதே நேரத்தில் இடம்பெறும் என்றும் செயலாளர் அறிவித்துள்ளார்.

ஆகவே, ஏறாவூர் நகர சபையின் கடந்தகால செயற்பாடுகளை நோக்குகின்றபோது இதன் பின்னணியில்  பாரிய சந்தேகம் நிலவுகின்றது.
இந்த விடயம் குறித்து மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் மட்டக்களப்புப் பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X