2025 மே 02, வெள்ளிக்கிழமை

வெருகல் கங்கைக் கதவு மூடப்பட்டதால் விவசாயிகள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2014 மே 29 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த ஒரு வாரமாகவிருந்து மாவில் ஆற்றிலுள்ள வெருகல் கங்கைக் கதவு மூடப்பட்டுள்ளதால், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பல கிராமங்களில்; குடிநீர் மற்றும் பயிர்ச் செய்கைக்கான  நீரின்றி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபருடன் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெறுவதாக வெருகல் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன் தெரிவித்தார்.

வெருகல் கங்கைக் கதவு மூடப்பட்டுள்ளதால், கடல் நீர் வெருகல் கங்கைக்குள் ஊடுருவி  உவர் நீராக மாறியுள்ளது.

மேலும் வெருகல் கங்கை நீரை நம்பியுள்ள வெருகல், பூநகர், வட்டவன், மாவடிச்சேனை, சேனையூர், முத்துச்சேனை, வெருகல் முகத்துவாரம், சூரநகர், ஆனைத்தீவு போன்ற கங்கைக் கரையோர கிராம மக்கள் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

உப பயிர்ச் செய்கையில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன் கூறினார்.

03 மாதகால அவகாசத்தில் வெருகல் கங்கைக்கு நீர் திறந்துவிடப்படுமென  நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், நிலக்கடலை போன்ற உப  பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டன.   ஆனால், பயிரிட்டு 02 மாதங்களாகின்ற நிலையில்  இடைநடுவில் கங்கை நீர் தடைப்படுத்தப்பட்டதால் கங்கைக்குள் கடல் உவர் நீர் பாய்ந்துள்ளது.

இதை அறியாது நீர் பாய்ச்சிய விவசாயிகளின் பயிர்கள்  கருகியதாக   விவசாயிகள் சங்கத் தலைவரும் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவருமான என்.ஞானகணேசன் கூறினார்.  ஒட்டுமொத்தத்தில் வெருகல் கங்கை நீரை நம்பியிருந்த சுமார் 1,500 விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஆனைத்தீவு கிராம சேவையாளர் பிரிவில் 400 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை, மிளகாய், சோளம், பயறு போன்ற பயிர்கள்  கருகியுள்ளதாக ஆனைத்தீவுக் கிராம சேவையாளர் லிங்கேஸ்வரன் ஜீவராணி தெரிவித்தார்.

பிரதேச சபையால் வழங்கப்படும் நீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக  வெருகல் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சாந்தகுமார் தெரிவித்தார்.

மிகவும் வறட்சி நிலவுவதால் இலங்கைத்துறை, கறுக்காமுனை போன்ற பகுதிக் கிராம மக்களுக்கு தாம் குடிநீர் விநியோகத்தைச் செய்து வந்ததாகவும் ஆனால், தற்சமயம் வெருகல் கங்கைக்கு நீர் வழிந்தோடும் மாவிலாற்றுக் கதவு மூடப்பட்டுள்ளதால் கடல் உவர் நீர் கங்கைக்குள் புகுந்துள்ளது.  இதனால், தமது நீர் சுத்திகரிப்பு நிலையமுள்ள இடத்திலிருந்து பெறப்படும் நீரும் உவர் நீராக மாறியுள்ளது.  பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெருகல் வைத்தியசாலை, பாடசாலைகள், கல்வி அலுவலகம் மற்றும் பல கிராமங்கள் குடிநீர் விநியோகத்தில் உவர் நீர் கலந்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெருகல் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சாந்தகுமார் தெரிவித்தார்.

மாவிலாற்றில் தேக்கப்படும் மகாவலி கங்கை நீர் வேளாண்மை விவசாயத்துக்காக திசை திருப்பப்படுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடத்தின் குறைந்த மழை வீழ்ச்சி இத்தகைய நீர் பற்றாக்குறைக்கு  காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .