2025 மே 02, வெள்ளிக்கிழமை

அமெரிக்க தூதரக அதிகாரிக்கும் யோகேஸ்வரன் எம்.பி.க்கும் இடையில் சந்திப்பு

Menaka Mookandi   / 2014 மே 30 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன் ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்காக அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி தெரேசா டேலாச்சி,  அரசியல் நிபுணர் ஆர்.ஈ.சந்தீப் குரூஸ் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனை சந்தித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரின் மட்டக்களப்பு வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (29) இரவு இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இக்கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மதங்களுக்கு இடையில் நிலவும் முறுகல் நிலைகள் மற்றும் மத ரீதியான பிரச்சனைகள் பற்றி கேட்டறியப்பட்டது.
 
மத ரீதியான விடயங்களில் இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவு விடுக்கும் அச்சுறுத்தல் பற்றியும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்துக்காட்டினார்.

அத்தோடு, பௌத்த விகாரைகள் ஸ்தாபிப்பு, இந்து சமய சின்னங்களை பௌத்த மத அடையாளமாக காட்டி தொல்பொருள் பகுதிக்கு வழங்கும் செயற்பாடுகள், பௌத்த பிக்குகளும் இராணுவத்தினரும் புலனாய்வு பிரிவினரும் சிங்கள குடியேற்றத்துக்கும் பௌத்த மத செயற்பாட்டுக்கும் தமிழ் பகுதிகளில் ஏற்படுத்தும் நடவடிக்கை, பௌத்த குருமார்கள் சிவில் விடயங்களை குழப்புகின்ற செயற்பாடுகள் போன்றவைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சில ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ முகாமில் எத்தனை பௌத்த விகாரை தோன்றியுள்ளது என்பதும், இது பின்னர் தமிழ் மக்களிடம் எவ்வாறான இன, மத முறுகலை தோற்றுவிக்கும் என்பதையும் எடுத்து விளக்கிக் கூறினார்.

இவ்வேளை இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களின் பிரச்சனைகள் சார்பாக கேட்கப்பட்ட வினாவுக்கு தமிழ் பேசும் சமூகம் என்ற வகையில் சில சில இன மத முரண்பாடுகள் தோன்றினாலும் பெரிதாக குறிப்பிடக் கூடியதாக விடயங்கள் எதுவும் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போது கிழக்கு மாகாண சபை இன ரீதியாக தமிழ் மக்களை நியமனங்கள் உட்பட சகல விடயங்களிலும் புறக்கணித்து வருவதை சில ஆதாரங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இச்சந்திப்பின் போது எடுத்துக் கூறியுள்ளார். அத்தோடு பல விடயங்களும் இங்கு பேசப்பட்டன.

இதே வேளை இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்காக்ன அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ரெரேசா ரெலச்சியா, அரசியல் நிபுணர் ஆர்.ஈ.சந்தீப் குரூஸ் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபைப் பிரதிதிநிதிகளை நேற்றைய தினம் சந்தித்தனர். ஓட்டமாவடியில் உள்ள அல் கில்மா கற்கை நிறுவனத்தில் நேற்று வியாழக்கிழமை இச்சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் மாவட்டத்திலுள்ள மக்களது பிரச்சினைகள், அவர்களது தேவைகள், சமூகமட்ட அமைப்புகளின் செயற்பாடுகள், மத நிறுவனங்கள் மதம் சார்ந்த பிரச்சினைகள், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், சமூகத்தில் தேவையாக உள்ள ஊடக இடைவெளி குறித்தும் தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் குறித்தும் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ், செயலாளர் எஸ்.எம்.இஸ்ஸடீன், உபதலைவர் திருமதி எஸ்.ருத்ராதேவி, ஊடக இணைப்பாளர், உறுப்பினர்களான உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, சமகாலப் பிரச்சினைகள், கடந்தகால முரண்பாட்டு விடயங்களுக்கான தோற்றுவாய்கள் எதிர்காலத்தில் அவ்விடயங்கள்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபை முன்னெடுக்கவுள்ள விடயங்கள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .