2025 மே 01, வியாழக்கிழமை

'ஏறாவூர் மக்கள் நிதானத்துடன் செயற்படுகின்றனர்'

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹூஸைன்

'நாட்டில் சமீப நாட்களாக நிலவி வருகின்ற குழப்பத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாது ஏறாவூர்ப் பிரதேச மக்கள் மிகவும் நிதானத்துடனும் மனிதாபிமானத்துடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது' என ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.எஸ். துசித்தகுமார பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

'இது இந்தப் பகுதியில் வாழும் மக்களின் ஒரு வெற்றி என்றே கூறலாம். அது பொலிஸாராகிய எமக்கும் படையினருக்கும் அரசாங்க நிர்வாக அதிகாரிகளுக்கும் கிடைத்த ஒரு பாரிய வெற்றியாகும்' என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அவசர குறுந்தகவல் பணிப்புரைக்கமைவாக மாவட்ட அரசாங்க அதிபரினால் பிரதேச செயலகங்கள் தோறும் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் புதன்கிழமை(18) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஆன்மீக ரீதியில் கட்டுப்படுத்த முடியாத இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தினரைக் கட்டுக் கோப்புக்குள் வைத்திருக்க நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள எண்பது எண்பத்தைந்து சத வீதமானோருக்கு தமது ஆன்மீகக் கட்டுப்பாடுகளையும் ஒழுக்க விழுமியங்களையும் மீறி நடக்க விருப்பமில்லை. அவர்கள் தமது சொந்த மதங்களையும், ஏனைய மதங்களையும், நாட்டின் சட்டத்தையும் மதித்து நடக்கின்றார்கள்' 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இதே போன்று நாட்டின் ஏனைய பாகங்களிலும் நிலைமை இருந்தால் நாடு மிகவும் வெற்றியடைந்த நாடாக இருக்கும். ஒரு பிரதேசத்தில் அமைதி சீரழிந்தால் அதற்கு அங்கள்ள பொலிஸசாரும் படையினரும் சமயத் தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும்தான் பொறுப்புக் கூறவேண்டும்.
மேற்கூறப்பட்டவர்கள் மக்களுடன் இணைந்து சரியாகச் செயற்படாததன் காரணமாகத்தான் இவ்வாறான குழப்ப நிலைகள் நாட்டின் வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளன.

எந்த மதத்திலும் ஆன்மீக ரீதியாக வழிப்படுத்த முடியாத பத்துப் பதினைந்து வீதத்தினர் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் தமது மதக் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. இவர்கள்தான் குழப்ப வாதிகள்.

சிங்கள,தமிழ்,முஸ்லிம் மற்றும் இன்னபிற சமூகங்களிலுள்ள கட்டுக்கடங்காத இந்தப் பத்துப் பதினைந்து பேர் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக் கொண்டு குழப்பத்தில் ஈடுபடுகின்றார்கள்.

இந்த விஷமிகள் ஏதாவதொரு குழப்பத்தை வலிந்திழுத்து எடுத்து தங்களது அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களை அடைந்து கொள்ள கடும் முயற்சி எடுக்கின்றார்கள்.

30 வருடங்களாக யுத்திற்குள் துவண்டு போயிருந்த நமக்கு யுத்தம் முடிவடைந்து சமாதானத்தின் ஒளிக்கீற்றுக்கள் தென்படுகின்ற இந்தக் காலகட்டத்தில் இப்படியொரு அசாதாரண சூழ்நிலை நாட்டில் ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.

யுத்த காலத்தில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் நாமெல்லோரும்  அனுபவித்த வேதனைகளும் துயரங்களும் இன்னமும் நெஞ்சில் நோவுகளாக இருக்கின்றன.

நடக்கின்ற சம்பவங்களுக்கு வீதியை மறித்து, கறுப்புக் கொடிக்கட்டி, டயர்களை எரித்து, ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்புத் தெரிவிப்பதாக இருந்தால் வருடத்தில் 365 நாட்கள் கூடப் போதாது. தொடர்ந்து செய்து கொண்டே இருக்கலாம்.

குழப்பவாதிக்ள தங்களுக்கு வாசியாக இப்பொழுது பேஸ்புக், டுவிற்றர், இணையதளங்கள், குறுஞ்செய்தி என்பனவற்றையும் பயன்படுத்துகின்றார்கள்.

நாட்டில் எப்பாகத்திலும் என்ன நடந்தாலும் எமது ஏறாவூர்ப் பிரதேசத்தில் எதுவித அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும்.

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள்; மற்றும் இன்னபிற தொழிற்சங்கங்களும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவற்காக செயற்படுவது போல் தெரிகிறது. என்ன நடந்தாலும் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து துன்பப்படுவது சாதாரண மக்களேயாகும்.

அமைதியாக இருக்கும் இந்தப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த யாராவது முனைந்தால் அவர்களுக்கெதிராக சட்டத்தையும் ஒழுங்கையும் நாம் கடுமையாக நிலைநாட்டுவோம், கடும் நடவடிக்கை எடுப்போம்.

ஏனைய பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைமைகளுக்கு நாம் பதில் கூற வேண்டிய அவசியமில்லை. எமது பகுதியை அமைதியான இடமாகப் பாதுகாத்தால் அதுவே சரியான புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • Adam Thursday, 19 June 2014 11:45 PM

    அடேங்கப்பா...!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .