2025 மே 03, சனிக்கிழமை

'அரசியலை விஞ்ஞானமாகப் பார்க்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 20 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

எமது மக்கள் அரசியலை விஞ்ஞானமாக பார்க்க வேண்டும். அதை  நாங்கள் பயன்படுத்த வேண்டும். அதனால்தான் பாடங்களில் அரசியல் விஞ்ஞானம் என்று சேர்க்கப்பட்டுள்ளதாக  மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அரசியலை நாங்கள் விஞ்ஞான ரீதியாக சிந்திக்க வேண்டும்.அப்போதுதான் சகல வளங்களையும் கொண்ட சமூகமாக நாம் வாழமுடியும் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்கு உட்பட்ட மகிழூர்முனை சக்தி வித்தியாலயத்தின் இரண்டு மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல்  நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது. இதில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்திகள் நடைபெறுவதை இன்று நீங்கள் காணலாம். வெருகல் முதல் துறைநீலாவனைவரை பல அபிவிருத்தித் திட்டங்களை நீங்கள் அவதானிக்கமுடியும்.

எந்த அரசாங்கமும் செய்யாத அபிவிருத்தியை ஒரு குறுகிய காலத்துக்குள் இந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் செய்துள்ளது. இந்த மகிழுர் கிராமத்துக்குள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இங்குள்ள மக்களுக்கு அறுபது வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன.

வெள்ள காலத்தில் நான் இங்கு வந்தபோது, இங்கிருந்த மகளிர் சங்கங்கள் தங்களது பகுதிகளில் வீடமைப்பு திட்டத்தை  ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்திய வீட்டுத்திட்டத்துக்கு தெரிவுசெய்யப்படாத ஒரு பிரதேச செயலகமாகவுள்ள நிலையிலும் அதிகாரங்களைக் கொண்டு இது பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதேபோன்று, உள்ளூர் வீதி புனரமைப்புகளுக்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன. இதனை ஒரு குறுகிய காலத்துக்குள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். இப்பகுதியிலிருந்த மின்சார பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வீதியமைப்புகள் உள்ளன. முக்கியமாக நீண்டகால தேவையாகவிருந்த மகிழூர் பிரதான வீதியை திருத்துவதற்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 15 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிலும், மகிழூர்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஆறு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் கல்வியை நோக்கமாகவும் மிக முக்கியத்துவமான தேவையையும் கருத்தில் கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ளவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எமது சமூகத்துக்கு இன்று கல்வி மிக முக்கியத்துவமான விடயமாகவுள்ளது. அதற்காகவே நாங்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்துவருகின்றோம். கடந்த காலத்தில் கல்வியை பொறுத்தவரையில் இதுபோன்ற வாய்ப்புகள் ஏற்படவில்லை. வருடகால யுத்தம் காரணமாக இந்த வாய்ப்புகள் எமக்கு கிட்டவில்லை. ஆனால், அன்று இருந்த நிலைமைகள் மாற்றப்பட்டு சகல வளமும் கொண்ட பாடசாலைகளாக இன்று மாற்றப்பட்டுவருகின்றன.

இன்று மட்டக்களப்பு மத்தி வலயம் முதல் இடத்தில் உள்ள நிலையில், எமது பிரதேசத்தில் உள்ள வலயங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. முன்னர் யாழ்ப்பாணத்தில் நல்ல கல்வி என்று நாங்கள் கதைப்பது உண்டு. ஆனால், அங்கும் பின்தங்கிய நிலையே காணப்படுகின்றது.
இதற்கு காரணம் கடந்த 30 வருடகால யுத்தம் எங்களை கீழ் நகர்த்தியுள்ளது. அத்துடன், எம்மத்தியில் கல்வியில் ஆர்வம் குன்றிவருவதும் காரணமாகும். இன்று பட்டிருப்பு கல்வி வலயம் ஒரு வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது.

இன்று மக்கள் எதிர்பார்க்காத பல வேலைத்திட்டங்களை நாங்கள் ஏற்படுத்தி வருகின்றோம். படுவான்கரை பிரதேசம் உட்பட அனைத்துப் பகுதிகளுக்குமான குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கு ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

நிரந்தரமாக மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் கீழ் திவிநெகும திட்டத்தின் ஊடாகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறு பல உதவிகள் வழங்கப்பட்டாலும், தேர்தல்கள் வரும்போது அரசாங்கத்துக்கு எதிராகவே வாக்களிப்பீர்கள். ஆனால், உதவி தேவையென்றால் அரசாங்கத்திடமே வருகின்றீர்கள். கடந்த காலங்களில் வாக்களிக்கவில்லை என்பதற்காக அபிவிருத்தி திட்டங்களை தடுத்த அரசியல்வாதிகளும் எம்மத்தியில் இருந்துள்ளனர். அவ்வாறான ஒரு சிந்தனை என்னிடம் இல்லை. நீங்கள் வாக்களிக்காவிட்டாலும், உங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுத்தே வருகின்றேன்.

எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் என்றாலும், அரச வளங்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தில் நாங்கள் இருக்கவேண்டும். இந்த மாவட்டத்தில் எமக்கு ஏதாவது பாதகம் விளையும்போதே எதிர்க்கட்சியொன்று தேவை. ஆனால், இங்கு அவ்வாறு எதுவும் நடைபெறுவதில்லை.ஆகவே எங்களுக்கு எதிர்க்கட்சிகள் இங்கு தேவையில்லை.

இன்று இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவளித்து வருகின்றனர். சிங்களப் பகுதியில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் அவரே வெற்றி பெற்று வருகின்றார். எதிர்வரும் ஊவா மாகாணசபை தேர்தலிலும் எமது கட்சியே வெல்லும். இதில் எதுவித மாற்றமும் இல்லை. எதுவித இனவேறுபாடும் காட்டாமல் ஜனாதிபதி அனைத்து இன மக்களுக்கும் ஆற்றிவரும் சேவையே அதற்கு காரணமாகும். அதனை மட்டக்களப்பு மாவட்ட மக்களும் இங்கு செய்யவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இந்த ஆண்டு 3000 மில்லியனுக்கு மேல் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை சிலர் வெளிநாட்டு வங்கிகள் தருவதாக கூறுகின்றனர். எந்த வங்கி தந்தாலும், அவை அரசாங்கம் கடனாகவே பெற்றுக்கொள்கின்றது. அரசாங்கம் விடுக்கும் கோரிக்கைகளுக்கு அமைவாகவே வழங்கப்படுகின்றது. அவை அரசாங்கத்தின் நிதியாகவே கொள்ளப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் அரசியலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்தீர்கள். அதனால் உங்களுக்கு என்ன இலாபம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X