2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

துர்கிஸ்தான் இராணுவத்திடம் சிக்கிய இலங்கையர்களை மீட்கமாறு கோரிக்கை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

துர்கிஸ்தானில் இராணுவத்தினரின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பை சேர்ந்தவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் சென்று நேரடியாக கடிதம் மூலம் திங்கட்கிழமை(11) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையைச் சேர்ந்த பலர், பல்வேவறு தொழில்வாய்ப்புகளைப் பெற்று துர்கிஸ்தானில் தொழில்புரிந்துவந்த நிலையில், அண்மையில் அங்குள்ள இராணுவத்தினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் அனைத்து உடைமைகளும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கைதிகள் போல் நடத்தப்பட்டுவருவதாக அங்கிருக்கும் சிலர் தமது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அனைவரையும் கைதுசெய்த இராணுவததினர் அவர்களிடம், என்ன செய்யப்போகின்றீர்கள்? இலங்கைக்கு போகப்போகின்றீர்களா? அல்லது துர்கிஸ்தானில் வேலைசெய்யப்போகின்றீர்களா என்று கேள்விகள் கேட்பதாகவும் இலங்கைக்கு செல்லப்போகிறோம் என்று கூறுவோரை மட்டும் சிறையில் அடைத்து அவர்களை வெளித்தொடர்பு அற்ற முறையில் நடத்துவதாகவும் தெரியவருகின்றது.  

துர்கிஸ்தானில் வேலைசெய்யப்பபோவதாக கூறியவர்களை படைமுகாம்களில் வேலைகளில் ஈடுபடுத்திவருவதாகவும் தெரியவருகின்றது.
'முகவர்கள் மூலம் மூன்று இலட்சத்துக்கு அதிகமான தொகையினை செலுத்தி வெளிநாடுகளுக்கு எமது பிள்ளைகளை அனுப்பியுள்ளபோதிலும் அவர்கள் அங்கு இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்' என துர்கிஸ்தானில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் தந்தையான வெல்லாவெளி, 39ஆம் கிராமத்தினை சேர்ந்த இராமலிங்கம் என்பவர்  தெரிவித்தார்.

இவரது மகனான டினேஸ் என்பவர் கடந்த சனிக்கிழமை(9) இவருக்கு தொடர்புகொண்டு 'அதிகம் கதைக்கமுடியாது, தங்களை இராணுவம் பிடித்துவைத்துள்ளது, தங்களைப்போன்று 39 பேர் அங்கு இருக்கிறார்கள். எங்கள் அனைவரையும் வெளியாருடன் தொடர்புகொள்ள முடியாதவாறு அடைத்து வைத்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளார். 

அதேபோல், தாந்தாமலை 40 ஆம் கட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம்   என்பவரது மகனும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் திங்கட்கிழமை(11) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தை சந்தித்து  தங்களது பிள்ளைகளை மீட்க நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,

இவ்விடயம் தொடர்பில், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று எடுத்துக் கூறினேன். தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு எழுத்துமூலமான கோரிக்கையினை விடுத்துள்ளேன்.

துர்கிஸ்தானில் இராணுவத்தினரின் பிடியில் 39க்கும்  மேற்பட்டோர் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் சென்றுள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பில் உறவினர்கள் என்ன நடவடிக்கையெடுப்பது யாரிடம் செல்வது என்ற தெரியாத நிலையிலேயே இருந்துவருகின்றனர்.

அவர்கள் அனைவரது விபரங்களையும் திரட்டுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X