2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சவூதி சிறையிலிருந்த இலங்கை பணிப்பெண் விடுதலை

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூரிலிருந்து சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றபோது, அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது மனைவி சிறையிலிருந்து விடுதலையாகி நேற்று வியாழக்கிழமை  (28) நாடு திரும்பியதாக அவரது கணவர் முஹம்மது கரீம் செய்யதலி தெரிவித்தார்.

ஏறாவூரைச் சேர்ந்த  5 பிள்ளைகளின் தாய், வறுமை காரணமாக தொழில்வாய்ப்பு தேடி கடந்த 2012ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.

அங்கு வீடொன்றில் பணிப்பெண்ணாக அவர் கடமையாற்றியபோதும்,  நீண்டகாலமாக சம்பளம் வழங்கப்படாமையால் வீட்டு எஜமானிக்குத் தெரியாமல் வேறு வீடு மாறியுள்ளார்.

இந்நிலையில், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் 6 மாத காலமாக சவூதி, றியாத்திலுள்ள மலாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், என்ன குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் அப்பெண்ணின் கணவர், கிழக்கு மாகாண அமைச்சர் நஸிர் அஹமட், மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், பிரதேச செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முறையிட்டார்.

இந்நிலையில், அப்பெண் பணியாற்றிய பழைய வீட்டு எஜமானுடன் தொடர்புகொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அஹமட், சிறையிலுள்ள பெண்ணை விடுவிக்கச் செய்ய நடவடிக்கை எடுத்தார்.

இதனையடுத்து, விடுதலையான அப்பெண்ணுக்கு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய பழைய வீட்டு எஜமான், ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவை சம்பளமாக வழங்கியுள்ளார். இந்நிலையிலேயே அவர் நேற்று நாடு திரும்பினார் என தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X