2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

' நான் பக்கச்சார்பாக செயற்படவில்லை'

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஒருபோதும் தான் பக்கச்சார்பாக இயங்கவில்லையென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்ரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இம்மாவட்டத்துக்கு  கிடைக்கின்ற நிதியை அனைத்து பிரதேச செயலங்களின் அபிவிருத்திகளுக்கு பிரித்து வழங்குவதாகவும் அவர் கூறினார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வருடத்தில்  மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவின் கருத்துக்கு  தெளிவுபடுத்துகையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா  தெரிவிக்கையில்,

''கிழக்கின் உதயம்' வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழ்ப் பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இது பக்கச்சார்பான நடவடிக்கையாகும்.  மாவட்ட அபிவிருத்திக்குழுவுக்கு தலைவராக நீங்கள் இருப்பது போன்று,  மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கும் அபிவிருத்திக்குழுத் தலைவராக உள்ளீர்கள்.  இவ்வகையில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழ்ப்; பிரதேசங்களுக்கும் கிழக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.  இதுவொரு பாரபட்சமான செயலென நாங்கள் கருதுகிறோம்.

தமிழர்களுக்கு வடக்கின் வசந்தமும் இல்லை. கிழக்கின் உதயமும் இல்லை' என்றார்.

இங்கு தெளிவுபடுத்தி உரையாற்றிய பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,


'நான் ஒருபோதும் பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கிடைக்கின்ற நிதி மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலங்களின் அபிவிருத்திகளுக்காகவும் பிரித்து வழங்கப்படுகின்றது. 

அதேபோன்று இம்மாவட்டத்திலுள்ள அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள், அரச தரப்பு அரசியல்வாதிகள் ஜனாதிபதியை கண்டு பேசி விசேட நிதியை  கொண்டு வருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படும் நிதியானது, கொண்டுவரும் அரசியல்வாதிகள் முன்வைக்கும் பிரதேசங்களுக்கும் அவர்கள் முன்மொழியும் அபிவிருத்தித்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வகையில், 'கிழக்கின் உதயம்' திட்டத்தின் கீழ் ஜனாதிபதியுடன் பேசி நானும் விசேட நிதியை கொண்டுவந்துள்ளேன். அதேபோன்று அமைச்சர் பசீர் சேகுதாவூத், பிரதியைமச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரும் கொண்டுவந்துள்ளனர். இது விசேட நிதி ஒதுக்கீடாகும்.

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேசி அபிவிருத்திக்காக நிதி கேட்டால் அவர் தருவதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்களும் ஜனாதிபதியைச் சந்தித்து அபிவிருத்திக்காக நிதியை ஜனாதிபதியிடம் கேளுங்கள். ஜனாதிபதி தருவார். விசேட நிதியை ஒதுக்கீடு செய்வார்.

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்துக்கு 4,000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 2,000 வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில் ஒன்று கூட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்கு கிடைக்கவில்லை.

முஸ்லிம் பிரதேசங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் ஒரு வீடு கூட கிடைக்கவில்லையென்பதை  அமைச்சர் பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் சுபைர் மற்றும் நானும்  இந்தியத் தூதுவரிடம்  சுட்டிக்காட்டினோம்.

அதேபோன்று  நான் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மேலும் 500 வீடுகள் இந்திய அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 200 வீடுகள் வன்னியிலிருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிர்மாணிப்பதற்காகவும் ஏனைய 300 வீடுகளையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பகுதிகளுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வகையில் முஸ்லிம் பிரதேங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த 300 வீடுகள்; ஓட்டமாவடி, ஏறாவூர், வாகரை, மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்படவுள்ளன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X