2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்வியை நோக்கிய அபிவிருத்தியில் கவனம் செலுத்தவேண்டும்: சுபைர்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

யுத்தத்துக்கு பின்னரான சூழ்நிலையில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து வாழக்கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளதென கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு சமூகங்களைச் சேர்ந்த  இளைஞர்களும் கல்வியை நோக்கிய கூட்டிணைந்த அபிவிருத்தியில் தங்களது முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.

மனித சேவைகளுக்கான இளைஞர் கழகமானது இளைஞர், யுவதிகளுக்காக  வாழ்க்கைத்திறன் பயிற்சி நிகழ்வை ஏறாவூர் அல். அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (09) நடத்தியது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஏறாவூர் மனித சேவைகளுக்கான இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் கே.அப்துல் வாஜித் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகங்களும் இணைந்து தங்களுக்கே உரித்தான கலாசார, பண்பாட்டு, ஒழுக்க விழுமியங்களை பாதுகாப்பதில்; கூடிய அக்கறை செலுத்தவேண்டும்.  தமிழ், முஸ்லிம் இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பாலமாக இருந்து செயற்படமுடியும்.

பாதிக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் இளைஞர் சமுதாயம் கூட்டுப் பொறுப்புடன் இயங்கி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யவேண்டும்.
அரசியலுக்கு அப்பால் நின்று தமிழ், முஸ்லிம் சமூக இளைஞர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு எம்மெல்லோருககும் உண்டு. குடும்பமும் சமூகமும் நாடும் போற்றுகின்ற நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் இளைஞர், யுவதிகள் மாற வேண்டும்.     

ஒழுக்கமுள்ள இளைஞர் சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பங்கு அளப்பரியது. ஒரு சமூகத்தினதும் நாட்டினதும் முன்னேற்றம் அந்த நாட்டின் இளைய சமுதாயத்தினரின் கைகளில் தங்கியுள்ளது.

இன்று நாட்டின் சகல அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் இளைஞர், யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.   இளைஞர்களை சிறந்த சமூகத் தலைவர்களாக உருவாக்குவதற்கு இளைஞர் நாடாளுமன்றம் கூட எமது நாட்டிலுள்ளது.

யுத்தத்துக்காக  வீணாக்கப்பட்ட இளைஞர் சக்தி தற்போது அபிவிருத்திக்கும் ஆக்கபூர்வச் செயற்பாடுகளுக்கும் உள்வாங்கப்பட்டுள்ளமை  கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.  இதேவேளை, யுத்தத்துக்கு  பின்னரான இலங்கையில் போதைப்பொருளுக்கு இiளுஞர்கள் அடிமையாகும் வீதம் அதிகரித்துச் செல்வதையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் போதைப்பொருளோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் பல இளைஞர்கள் சமீப நாட்களாக கைதுசெய்யப்பட்டு கம்பிக்கூண்டுக்குள் இருப்பதையிட்டு வெட்கமும் வேதனையுமாக இருக்கின்றது.

இவ்விடயத்தில் பேதங்களை மறந்து அனைத்துத் தரப்பினரும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமும் அவசரமுமாகும்.
முன்மாதிரியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றபோதே, எமது எதிர்கால சொத்துக்களான இளைய சமுதாயத்தை காப்பாற்றமுடியும்.

இந்தப் பிரதேசத்திலுள்ள இளைய சமுதாயத்தை  நன்கு திட்டமிட்டுச் சீரழிக்கின்ற மறைமுக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நான் அறிகிறேன். எனவே, இந்த நாசகார செயற்பாட்டிலிருந்து எம்மையும் எமது சொத்துக்களான இளம் சமுதாயத்தையும் காப்பாற்ற நாம் அணிதிரள வேண்டும்.

கடந்த தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் சிலர் தங்களது குறுகிய அரசியல் நோக்கங்களை அடைவதற்காக இளைஞர்களுக்கு போதைப்பொருள்களை வழங்கினார்கள்; என்பதையும் நான் வெளிப்படுத்தியிருந்தேன்;. அந்தச் சந்தர்ப்பத்தில் இப்படியொரு கேவல அரசியலைச் செய்து இளம் சமுதாயத்தின் வாழ்வை சீரழித்துவிடாதீர்கள் என்று நான் பொது மேடைகளில் உரக்கக் கத்தினேன். இந்த நிலைமையை அன்று நாம் தடுத்திருந்தால், இன்று இந்த இளைஞர்கள் தமது குடும்பத்தினரை விட்டு வாழ்வை சீரழித்து, சிறையில் வாடுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்காது.

இன்று நாட்டின் வேறுபல இடங்களில் கிராமப்புறத்து இளைஞர்கள் கல்வியிலும் ஏனைய புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் சாதனை படைக்கின்றவர்களாக இருக்கின்றபோது, எமது பிரதேச இளைஞர்கள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி சிறையில் வாடுகின்றார்கள்.
ஏனைய பகுதிகளில் இளைஞர்கள் பொருளாதார அபிவிருத்தியின் முதுகெலும்பாக மாறியிருக்கின்றார்கள்.' என்றார்.

முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் தற்போதைய மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீரலி, மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களான ஜே.ஆர்.கலாராணி, நிஷாந்தி அருள்மொழி, சேவாலங்கா நிறுவன மாவட்ட இணைப்பாளர் ஜே.ரதீஸ் உட்பட இன்னும் பல பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் இதில்  கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X