2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் போக்குவரத்து மார்க்கம் மாற்றம் : பயணிகள் அவஸ்தை

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பில் திடீரென போக்குவரத்து மார்க்கம் மாற்றப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

காலங்காலமாக தூரப்பிரதேச சேவையிலீடுபடும் பஸ்களும் குறுந்தூர சேவையிலீடுபடும் உள்ளுர் பஸ்களும் மட்டக்களப்பு சின்ன ஆஸ்பத்திரிச் சந்திக்கூடாகவே (மட்டக்களப்பு பொலிஸ் சந்தி) பயணிப்பதுண்டு.

ஆனால், கடந்த முதலாம் திகதியிலிருந்து அதிகார மட்டத்தில் இரவோடிரவாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விளைவாக மட்டக்களப்புக் கூடான போக்குவரத்து மார்க்கம் மாற்றப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை யார் எடுத்தார்கள் என்பது தங்களுக்கும் தெரியாது என மட்டக்களப்பு பிரதான பஸ் நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனினும் தூரப்பயண பஸ் சேவைக்கான மார்க்கம் செப்டெம்பர் 1 ஆம் திகதியிலிருந்து மாற்றப்பட்டிருப்பதாக போக்குவரத்துப் பொலிஸார் தங்களுக்கு அறிவித்தனர் என்று மட்டக்களப்பு பிரதான பஸ் நிலைய அதிகாரிகள் கூறினர்.

இப்படியொரு தீர்மானம் கச்சேரியில் எடுக்கப்பட்டதாக தங்களுக்கு அறியக் கிடைத்தது என்றும் அவ்வதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தீர்மானத்தின்படி, மட்டக்களப்பு சின்ன ஆஸ்பத்திரிச் சந்திக்கு ஊடாக வழமையான மட்டக்களப்பு–கொழும்பு நெடுஞ்சாலை வழியாகச் செல்லக்கூடிய திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கதுறுவெல, கண்டி, பதுளை, பாணந்துறை, காலி, மஹாஓயா பஸ்கள் பயணிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாற்றம் கொண்டு வரப்பட்டது தொடர்பில், பொது மக்களுக்கும் பயணிகளுக்கும் முறைப்படியான எந்தவொரு பொது அறிவித்தல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இத்தீர்மானம் தொடர்பில், குறைந்தபட்சம் பொதுமக்கள் பஸ்ஸுக்காக வழமையாகக் காத்திருக்கும் இடங்களில் துண்டுப் பிரசுரங்களுடாகவேனும் அறிவித்தல் இட்டிருக்கலாம் என்று பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது பொத்துவில், அக்கரைப்பற்று, அம்பாறை, கல்முனை, காத்தான்குடி நகரங்களிலிருந்து திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, கதுறுவெல கொழும்பு, கண்டி, பாணந்துறை, காலி நோக்கிச் செல்லும் சகல பஸ்களும் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் சென்று புதுப்பாலம் வழியாகத் திரும்பி, வாவிக்கரை வழியாக ஊறணியை வந்தடைந்து அதன் பின்னர் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் இணைந்து பயணிக்கின்றன.

மேலும் குறித்த பயண மார்க்கம் மாற்றப்பட்டு இப்பொழுது இரண்டு வாரங்களாகின்ற போதிலும் பயண மார்க்கம் மாற்றப்பட்ட தகவல் தெரிய வராமல் இன்னும் சின்ன ஆஸ்பத்திரிச் சந்தியில் இரவு வேளையில் வந்து பல மணி நேரம் காத்திருந்து, கடையிசியில் அதிக பணச் செலவில் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி வீடு போய்ச் சேர்வதாகத் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X