2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'குருக்கள் மடம் விவகாரத்தில் நகரசபை உறுப்பினர், முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்துள்ளார்'

Thipaan   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு குருக்கள் மடம் புதைகுழி தோண்டும் விடயத்தில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீத், முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்து செயற்பட்டுள்ளார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அகமது லெவ்வை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(14) நடைபெற்ற, 1990ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு குருக்கள் மடம் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் உறவினர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்,

கடந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு அடையாளப்படுத்துகின்ற ஒரு விடயமாக குருக்கள் மடம் புதைகுழி தோண்டும் விடயமுள்ளது.

கடந்த யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் முஸ்லிம்களும் கடத்தப்பட்டார்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுகின்ற ஓர் ஆவணமாக இந்த குருக்கள் மடம் முஸ்லிம் புதைகுழி தோண்டும் விடயமுள்ளது.

வடக்கு, கிழக்கில் அதிகளவாக முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு ஒரு இடமாக காத்தான்குடியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் 12.7.1990 அன்று கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கி வந்து கொண்டிருந்த போது குருக்கள் மடத்தில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள ஒரு அடையாளமாக குருக்கள் மடம் புதைகுழி உள்ளது.

காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதையடுத்து வடக்கு, கிழக்கில் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம்கள் எவரும் காணாமல் போனதாக தெரிவித்திருக்கவில்லை.

இந் நிலையில் காத்தான்குடியிலிருந்து 1990ஆம் ஆண்டு கடத்தி கொல்லப்பட்டவர்களின் விவரங்களை திரட்டி அவர்களின் விண்ணப்ப படிவங்களை முதல்கட்டமாக ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தோம்.

அந்த படிவங்களை ஒப்படைப்பதற்காக நாங்கள் ஆணைக்குழு தலைவரை சந்தித்த போது இது தான் முஸ்லிம் தரப்பிலிருந்து காணாமல் போனதாக வந்த முதல் விவரங்களாகும் என அவர் குறிப்பிட்டார்.

அன்றிலிருந்து இதுவரை வடக்கு, கிழக்கிலிருந்து 2,600 பேரின் விண்ணப்பங்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.
குருக்கள் மடம் பிரதேசத்தில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் சடலங்களை தோண்ட வேண்டும், அந்த சடலங்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பன போன்ற விடயங்களை ஆணைக்குழுவிடம் முன் வைத்த போது, குருக்கள்மடம் புதைகுழியை தோண்டுவது தொடர்பாக ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுத்தது.

அந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக ஆணைக்குழு தலைவர் உட்பட அதன் அதிகாரிகள் குருக்கள் மடத்துக்;கு வந்து பார்வையிட்டனர்.

அப்போது அந்த இடத்தை அடையாளப்படுத்தினோம். பின்னர் இதை தோண்டுவது தொடர்பாக கொழும்பில் ஆணைக்குழவின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நான் உட்பட எமது முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தோண்டுவதற்குரிய உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்குதவற்கு முன்வந்தது. இதே போன்று காத்தான்குடிக்கு ஆணைக்குழு நேரடியாக வந்து ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்தவர்களிடம் விசாரணைகளை மேற் கொண்டு சாட்சியங்களை பதிவு செய்தது.
இந்நிலையில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீத், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர் ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பில் முறைப்பாடு ஒன்றை செய்தார்.

இது தொடர்பாக அவர் செய்த முதல் முறைப்பாடு என்பதால் அவரின் முறைப்பாட்டை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த போது நீதிபதி எம்.ஐ. றியாழ் அதை தோண்டுவதற்கு உத்தரவிட்டார்.

இதன்படி ஜூன் மாதம் முதலாம் திகதி தோண்டுவதற்கு திகதி அறிவிக்கப்பட்டது. அப்போது களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு மேற்படி முறைப்பாட்டாளரினால் இடம் அடையாளப்படுத்தப்பட்டு, அந்த இடத்தில் தடிகள் நாட்டப்பட்டதுடன் பொலிஸ் பாதுகாப்பும் அந்த இடத்துக்கு போடப்பட்டது.
நாங்கள் ஆணைக்குழுவுக்கு அடையாளப்படுத்திய புதைகுழி உள்ள அதே இடம் அடையாளப்படுத்தப்பட்டது.

நீதிபதியினால் தோண்டுவதற்கு வழங்கிய ஜூலை முதலாம் திகதி தோண்டுவதற்குரிய வசதிகள் செய்யப்படாததால் ஆகஸ்ட் 18ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த 18ஆம் திகதி சட்ட வைத்திய நிபுணர்கள் வராததால் மீண்டும் நவம்பர் மாதம் 24ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
அப்போது அந்த 18ம் திகதி ஆணைக்குழுவுக்கு மேற்படி றவூப் ஏ மஜீத் அதே இடத்தையே மீண்டும் அடையாளப்படுத்தினார்.

இவ்வாறு இந்த இடத்தை அடையாளப்படுத்திய றவூப் ஏ மஜீத், கடந்த சனிக்கிழமையன்று(13) சட்ட வைத்திய நிபுணர்கள் குழு குருக்கள் மடத்தின் உரிய இடத்துக்கு வந்த போது அந்த இடத்தில் வேறு ஒரு பகுதியை அடையாளப்படுத்தினார்.

உரிய இடத்தை அடையாளப்படுத்திய பின்னரே நிபுணர்கள் குழு அந்த இடத்துக்கு வந்தது. அது மாத்திரமின்றி இரண்டு பேரைக் கூட்டி வந்த அவர் அதில் ஒருவரை வைத்து அந்த இடத்தில் சுனாமியினால் உயிரிழந்த சிலரின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறவைத்தார்.
இதனால் வந்த நிபுணர்கள் குழு முடிவெடுக்க முடியாமல் கொழும்பு திரும்பியது.

சட்டவைத்தியர்கள் நிபுணர்கள் அடங்கிய குழவை குருக்கள் மடத்துக்;கு அழைத்து வருவதற்கு நான் எடுத்த முயற்சி அதிகமாகும்.
அதற்காக கொழும்பில் ஏழு தினங்களுக்கு மேல் தங்கியிருந்து தனித்தனியே ஒவ்வொருவரை சந்தித்து எனது சொந்தப்பணத்தை செலவு செய்துதான் அவர்களை இங்கு நான் கொண்டு வந்த போது இந்த றவூப் ஏ மஜீத் இவ்வாறு நடந்து கொண்டது எனக்கும் இந்த முஸ்லிம் சமூகத்துக்கும் குறிப்பாக கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களாகிய உங்களுக்கும் கூறி வைக்க விரும்புகின்றேன்.

அரசியல் நோக்கங்களுக்காக நான் இதை செய்யவில்லை. இதற்காக நான் செலவு நேரம் பணம் அதிகமாகும் உரிய நேரம் தோண்டுவதற்காக வந்த போது இவர் காலை வாரி சமூகத்துக்கு பெரும் துரோகத்தனத்தை செய்து விட்டார்.

இதனால் இவரை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அவர் யாரையோ திருப்தி படுத்துவதற்காக அல்லது யாரோ சிலருடைய நிகழ்ச்சி நிரலிற்கேட்ப செயற்படுகின்றார் என விளங்குகின்றது.

இந்த விவகாரம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரைக்கும் சுனாமியினால் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாக எந்தவொரு கதையும் வரவில்லை. இப்போது அதிலும் கடந்த (13) அன்று இந்தக் கதை வருவதற்கு காரணம் என்ன எனக்கேட்க விரும்புகின்றேன்.

அவ்வாறு சுனாமியினால் இறந்தவர்களின் சடலங்கள் அங்கு புதைக்கப்பட்டிருந்தால் அது வெளியில் தெரியும், சுனாமியின் பின்னர் மீண்டும் ஒரு சுனாமி வரவில்லை.

சுனாமியினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்கள் பகிரங்கமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த இடத்தில் சுனாமியால் இறந்தவர்கள் அடைக்கம் செய்யப்பட்டிருந்தால் ஏன் அந்த இடம் அடையாளப்படுத்தப்படவில்லை என நான் கேட்கின்றேன்.

எனவே இந்த றவூப் ஏ மஜீத் என்பவரின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் இவர் இந்த சமூகத்துக்கு எதிராக இந்த விடயத்தில் செயற்பட்டுள்ளார் என தெரிவிக்க விரும்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் முக்கியஸ்தர்களான எம்.எச்.எம்.பசீர், ஏ.எல்.சாதிக், ஏ.ஜே.எம்.சாமில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X