2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் தொகையில் பெண்களே அதிகம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


உலகில்  வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் தொகையில் தற்போது  பெண்களே கூடுதலாக உள்ளதாக  பேராசிரியை திருமதி சித்திரேலேகா மௌனகுரு தெரிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் புதன்கிழமை (24) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

'மனித உரிமைகளும் பெண்களும்' என்ற தலைப்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்ற கருத்தின் அடிப்படையிலேயே மனித உரிமைகள் என்பதை அது வரையறை செய்தது. ஆனால், மனிதர்களுக்கிடையில் வேறுபாடுகள் மற்றும் வித்தியாசங்கள் உள்ளன. ஆண்கள் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், விசேட தேவையுடையவர்கள் முதலிய வௌ;வேறு பிரிவினர் உள்ளனர்.

பொருளாதார அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் மனிதர்களுக்கிடையில்  உள்ளன. சகலருக்கும் சம வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை.  வயது, உடல் நிலை என்பவற்றால் விசேட அக்கறைக்கும் பாதுகாப்புக்கும் உரிமைகளை ஊர்ஜிதப்படுத்தவும் தேவையான வெவ்வேறுபட்ட மக்கள் பிரிவினர் உள்ளனர்.

சமூகத்தில் இவர்களது நிலையும் சமூகம் இவர்களை நோக்கும் விதமும் வித்தியாசமானவை. இதனாலேயே, இன்று சிறுவர்களின் உரிமையும் பாதுகாப்பும் விசேட தேவையுடையோரின் உரிமைகள், முதியோரின் உரிமைகள் என்றெல்லாம் பேசுகின்ற போக்கு உருவாகியுள்ளது.

இதுபோலவே சமூகத்தில் பெண்களது நிலையும் வித்தியாசமானது. வேறுபட்டது. பெண்களை ஆண்களிலும் தாழ்ந்தவர்களாகவும் அந்தஸ்த்தில் குறைந்தவர்களாகவும் நோக்குதல் பரவலாக எல்லாச்சமூகங்களிலும் காணப்படுகின்றது.

அவர்களுக்கு சம உரிமைகளும் சம வாய்ப்புக்களும் கிட்டுவதில்லை. அவற்றை அடைவதற்கு அவர்கள் மேலதிக முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. பல சவால்களைச் சமாளிக்க வேண்யுள்ளது.

உலகில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் தொகையில் பெண்களே கூடுதலாக  உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்புக்கள் என்பன மிக குறைவாகவே இவர்களுக்கு கிடைக்கின்றன.

மதம், கலாசாரம் போன்றவற்றால் அதிகளவில் பெண்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் பரவலாக நடைபெறுகின்றன' என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X