2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கழிவுநீரை சுத்தப்படுத்தி கடலுக்கு அனுப்ப எடுத்த நடவடிக்கை நிறுத்தம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலிருந்து கழிவுநீரை கொண்டுவந்து கல்லடிப்பகுதியில் தேக்கி, சுத்திகரித்து கடலினுள் பாய்ச்சும் வகையில் மேற்கொள்ளப்படவிருந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைக்கு காத்தான்குடியில் ஒரு காணியை பெற்றுக்கொள்வதற்கான  ஆலோசனை கூறப்பட்டுள்ளதாகவும் நேற்று
ஞாயிற்றுக்கிழமை (05)  அவர் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கல்லடி, நொச்சிமுனை பகுதியில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் உள்ளன. அவற்றில் பல ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரால் சுனாமி பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், மிகுதிக் காணிகள் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பிலிருந்தது.

இந்த நிலையில், இவற்றில் 50 ஏக்கர் காணிகளில் காத்தான்குடியிலிருந்து கழிவுநீரை கொண்டுவந்து குட்டையில் தேக்கிவைத்து சுத்தப்படுத்தி கடலினுள் பாய்ச்சும் செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவிருந்தது.

இந்த நடவடிக்கை பாரிய சூழல் சுகாதாரப் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதை உணர்ந்த அப்பகுதி பொது அமைப்புகள்;, விளையாட்டுக்கழங்கள், கோவில்களின் பரிபாலன சபையினர் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இந்த விடயத்தை நான் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்குரிய அமைச்சர் டினேஸ் குணவர்த்தனவின் கவனத்துக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கும் கொண்டு வந்தேன்.

இது பிழையான செயற்பாடு என்பதை உணர்ந்த அமைச்சர், இதற்கு பொறுப்பான மேலதிக பொது முகாமையாளர் ஏ.குமாரரட்ன, பிரதம பொறியியலாளர் ஜ.சுதர்சன ஆகியோரை உடனடியாக நாடாளுமன்ற வளாகத்துக்கு அழைத்து குறித்த நடவடிக்கை தொடர்பில் என்னுடன் கலந்துரையாடுமாறு பணித்தார்.

இதன்போது கல்லடிப் பகுதியில் ஏற்படப்போகும் சூழல் பாதிப்புப் பற்றியும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் மேலதிக பொது முகாமையாளர் ஏ.குமாரரட்ன, பிரதம பொறியியலாளர் ஜ.சுதர்சன ஆகியோருக்கு எடுத்துக் கூறினேன்.

அங்கு குட்டையினை அமைத்து கழிவுநீரை சேகரித்து சுத்தப்படுத்தும்போது அதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஆய்வுசெய்யப்பட்டதா, சூழல் அறிக்கைகள் பெறப்பட்டதா, சூழல் அதிகாரசபையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேட்டபோது அவை எதுவும் நடக்கவில்லை என பதில் அளித்தார்கள்.

சூழல் அறிக்கை பெறப்படாமல், அது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தவறான நடவடிக்கை என்பதையும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது அப்பகுதியில் உள்ள மக்களின் அபிப்பிராயம் முன்னதாகவே பெற்றிருக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் சுட்டிக்காட்னேன்.

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் இறுதியாக கல்லடியில் மேற்கொள்ளப்படும் மேற்படி செயற்றிட்டத்தினை நிறுத்துவது எனவும் அதற்கு பொருத்தமான காணியை காத்தான்குடியில் கண்டுபிடிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X