2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சகலரும் நிம்மதியாக வாழவேண்டுமென்ற எண்ணத்துடன் அரசியலை பயன்படுத்துபவரே வி.முரளிதரன்: அமீர் அலி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.அஹமட் அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இன மக்களும் நிம்மதியாகவும் சுகந்திரமாகவும் வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் தனது அரசியலை பயன்படுத்திவருபவரே பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் இடங்களை அவர்களிடம் கையளித்து மீள்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ்,  மாஞ்சோலை கிராம அலுவலகர்  பிரிவில் உள்ள 35  குடும்பங்கள் தற்காலிகக்கொட்டில்களை  அமைப்பதற்கான பொருட்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நாட்டில் உள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் தனது அமைச்சின் ஊடாக மீள்குடியேற்ற திட்டங்களைச் செய்துவருகின்றார். குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில உள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் முழுமையாக தனது அமைச்சின் சேவை கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயற்பட்டுவருகின்றார்.

அவரிடம் முஸ்லிம், தமிழ், சிங்களம் என்ற பாகுபாடு கிடையாது. இன ரீதியான பேதம் பார்க்காமல் அனைவருக்கும் சமமாக சேவை செய்துவருகின்ற ஒரு அரசியல்வாதியாகவே அவரை நான் பார்க்கிறேன். அவர் மீள்குடியேற்ற மக்களுக்கு செய்கின்ற உதவிக்கு மீள்குடியேற்ற மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

மாஞ்சோலை பிரதேசம் யுத்தகாலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்று பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தப் பிரதேசத்துக்கு  அவரது அமைச்சினூடாக உதவிகள் நிச்சயம் கிடைக்கும். அதனை பொதுமக்கள் பிரயோசனப்படுத்தவேண்டும்' என்றார்.

தலா குடும்பத்துக்கு 25,000 ரூபாய் பெறுமதிப்படி சீமெந்து பைக்கட்டுக்களும் கூரைத்தகடுகளுமாக 35 குடும்பங்களுக்குமாக  875,000 ரூபாய் பெறுமதியில் இவை வழங்கப்பட்டன.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபைத் பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், அபிவிருத்தி உதவியாளர் எம்.முபாறக் உள்ளிட்ட பலர்; கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X