2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கவே செயற்படுகிறோம்: அரியநேத்திரன்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

'எமது தமிழ்த் தாயக மக்களுக்கு நாங்கள் தண்ணி கொடுப்பதுமில்லை. தண்ணி காட்டவுமில்லை. தாயக நிலங்களில் பூர்வீகமாக வாழ்ந்த எமது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கவே செயற்படுகின்றோமே ஒளிய, மாறாக மக்களுக்கு தண்ணி பெற்றுக்கொடுப்பது போல் அவர்களுக்கு தண்ணி காட்டவில்லை'

இவ்வாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (10) வெளியிட்டுள்ள அறிக்கையில்  அவர் மேலும் தெரிவிக்கையில், 

'தேர்தலை முன்னிட்டு எமது வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில், அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்காக தென்னிலங்கை பேரினவாத கட்சி இன்று அரசியலில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்காக எமது மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பலர் இங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

அபிவிருத்திக்கு நாங்கள் தடையில்லை. ஆனால், அபிவிருத்தி எங்கள் இலக்குமில்லை. இந்த வகையில், பட்டிருப்புத்தொகுதி மக்களின் வாக்குகளை சிதறடிக்க சதி நடந்துகொண்டிருக்கின்றது. பட்டிருப்புத்தொகுதி மக்களை பச்சோந்தியாக்க முற்படுகின்றனர். பட்டிருப்புத்தொகுதி காலங்காலமாக தமிழ்த் தேசிய அரசியலுடன் பின்னிப்பிணைந்துள்ளது. இதற்கு மறைந்த எமது  தலைவர் சி.மு.இராசமாணிக்கம் பல தேர்தலில் வாக்குக் கேட்டாலும் அவருக்காக வாக்கு கேட்கவில்லை. இனத்தின் விடுதலைக்காகவே வாக்குக் கேட்டு வெற்றி பெற்றார். அவரின் பணியில்தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணம் செய்துகொண்டிருக்கின்றது.

நாங்கள் மலசலகூடம் கட்டுவதற்கோ, மண்வெட்டி வழங்குவதற்கோ வாக்குக் கேட்கவில்லை. தாயக நிலங்களில் பூர்வீகமாக வாழ்ந்த எமது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை பெற்றுக்கொடுக்கவே வாக்குக் கேட்கின்றோம். 65 வருடங்களாக அஹிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் தற்போது இராஜதந்திர ரீதியாகவும் எமது விடுதலைப் பயணம் சென்றுகொண்டிருக்கின்றது.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச ரீதியில் அங்கிகாரம் பெற்ற கட்சியாக அங்கிகாரம் பெற்றதனால் அரசாங்கத்துக்கு தலையிடியாக மாறியுள்ளது. இதனால், தமிழ் மக்களை குழப்பி வாக்குகளை பெற்று வெற்றி பெறலாம் என அரசாங்கம் பகல் கனவு காண்கின்றது.

பட்டிருப்புத்தொகுதி வாழ் புத்திஜீவிகளே! மக்களே! நீங்கள் விழிப்படைந்து, தமிழ்த் தேசியத்தின்பால் தொடர்ந்து கரங்கோக்;குமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்'  என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X