2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறந்த கல்விச் சமூகமாக முஸ்லிம் சமூகம் மாற வேண்டும் : ஹிஸ்புல்லாஹ்

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சிறந்த கல்விச் சமூகமாக முஸ்லிம் சமூகம் மாற வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள, பாலமுனை அஸ்ரப் வித்தியாலத்தின் ஆராதனை மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூன்று மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் இந்த ஆராதனை மண்டபம் அமைக்கப்படவுள்ளது.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நமது சமூகம் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும். கல்விச் சமூகமாக மாறவேண்டும். அந்த வகையில் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் சிறந்த கல்விப் பெறுபேறுகளை பெறும் பாடசாலையாக இந்த அஸ்ரப் வித்தியாலயம் திகழ்கின்றது.

எந்த ஒரு நிறுவனமானாலும் அந்நிறுவனத்தின் தலைவர் சிறப்பாக இருந்தால் அந்நிறுவனம் முன்னேற்றமடையும். இப்பாடசாலையின் அதிபர் ஒரு சிறந்த அதிபராக இருக்கின்றார். செயல் திறன் உள்ளவராக காணப்படுகின்றார்.

பாடசாலையின் வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் பாடுபட்டு வருகின்றார். இவரை காத்தான்குடியிலுள்ள தேசிய பாடசாலையொன்றுக்கு அதிபராக மாற்ற முற்பட்ட போது, இந்த பாலமுனை பிரதேசத்திலிருந்து முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் என்னை சந்தித்து இவரை இடமாற்ற வேண்டாமெனக் கூறினர். இதனுடைய அதிபர் சிறப்பாக இந்த பாடசாலையை கொண்டு செல்கின்றார்.

ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது அந்தப்பாடசாலையின் கல்விப் பெறுபேறுகளிலேயே தங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் அல்லது கல்வியில் ஆர்வம் காட்டும் எந்தப்பாடசாலையாக இருந்தாலும் அந்தப்பாடசாலைக்கு நாம் உதவுவோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், இருபது வீதமான நிதியே செலவு செய்யப்பட்டுள்ளது.
அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை விரைவாக செலவு செய்தால்தான் ஏனைய நிதிகள் விடுவிக்கப்படும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எம்.எம்.ஹைறுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.இஸ்மாலெவ்வை, மற்றும் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ.பதுர்தீன் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X