2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கு பல்கலையின் முன்னாள் பீடாதிபதி மனோ சபாரத்தினம் காலமானார்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட பேராசிரியருமான  மனோ சபாரத்தினம் தனது 81ஆவது வயதில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில்  காலமானார்.

இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 20 வருடங்கள் சேவையாற்றினார்.  1999இல் ஓய்வுபெற்று மட்டக்களப்பில் தங்கியிருந்து 2002இல் மட்டக்களப்பில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தை ஆரம்பித்து அதன் முதலாவது தலைவியாக பதவி வகித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் சிறப்புப்பட்டம் பெற்ற பேராசிரியர் மனோ சபாரத்தினம், லண்டன் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.

தெல்லிப்பழை மகஜனாக் கல்லூரியில் சிறிதுகாலம் ஆசிரியராக கடமையாற்றிய இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய முக்கியமானவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.

அந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் விஞ்ஞானபீடாதிபதியாக பதவி வகித்த பேராசிரியர் மனோ சபாரத்தினம் நான்கு தடவைகள் பீடாதிபதியாக செயற்பட்டார்.

கிழக்கில் ஏற்பட்ட நெருக்கடியான காலங்களில் மாணவர்களை பாதுகாத்து அவர்களின் நலன் பேணியதில் அவரது அறிவு துணிவான கவனங்கள் முக்கியமானவை.

சூழல் பாதுகாப்பு, இயற்கை பேணுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திய பேராசிரியர் மனோ சபாரத்தினம் சமூகத்தொண்டுகளிலும் தன்னை ஈடுபடுத்தினார்.

இவர் எழுதிய உயிர்ப்பல்வகைமை என்ற புத்தகங்களை பூரணி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. சுவாமி விபுலாநந்தரின் கல்வியியல் தரிசனம் என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்த இலங்கையின் விலங்கியல் துறைசார்ந்த முக்கியமான பேராசிரியராக விளங்கிய மனோ சபாரத்தினம், கனிவும் அனைவரையும் வழிப்படுத்தும் நிர்வாகத்திறனும் கொண்டவர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X