2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'மட்டு. மக்களின் வாழ்க்கை பிரதியமைச்சர்; முரளிதரனாலேயே கட்டியெழுப்பப்படுகின்றது: சந்திரபால

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


யுத்தத்தால் அழிக்கப்பட்ட மட்டக்களப்பு  மாவட்ட மக்களின் வாழ்க்கை மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனாலேயே கட்டியெழுப்பப்பட்டு வருவதாக  ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை கிராமத்தில் நேற்று திங்கட்;கிழமை (13)  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக் கிளை ஸ்தாபிக்கப்பட்டது. இந்த  நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது, பொண்டுகள்சேனை மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை கிராமமும் அதை  அண்டியுள்ள ஏனைய கிராமங்களும் கடந்தகால யுத்தத்தினால் வீணாக அழிக்கப்பட்டன.  இக்கிராமங்களைச் சேர்ந்த  மக்கள்  தினமும் துப்பாக்கிச் சத்தங்களோடு எந்நேரமும் மரண பயத்துடன் நிம்மதியற்று வாழ்ந்துவந்தனர். ஆனால், இன்று அவ்வாறான பயம் எதுவுமில்லை.

இந்நிலைமையை உருவாக்கி உங்கள் பிள்ளைகளை தொடர்ந்தும் யுத்தத்துக்கு பலி கொடுக்காமல் பாதுகாத்துத்தந்தவர் தற்போதைய அரசாங்கத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சராக உள்ள விநாயகமூர்த்தி முரளிதரனே.

கடந்தகால அநாவசிய யுத்தத்தின்போது இழந்தவைகளில் உயிரிழப்பை மட்டும் தவிர்த்து, மக்கள் ஏனையவைகளை மீளப்பெற வேண்டுமென்ற நோக்கிலேயே  பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்.

கல்வி, பொருளாதாரம், உயிர், உடைமைகள், நிம்மதியான வாழ்க்கை  எல்லாவற்றையுமே மக்கள் யுத்தத்தின்போது இழந்துவிட்டனர். இந்த இழப்புக்களை நாம் படிப்படியாக ஈடுசெய்யவேண்டும். உயிர் இழப்புக்களை மாத்திரம் திரும்பவும் பெறமுடியாது.

மேலும், இளம் சந்ததியின் கல்வி பாழாய்ப்போவதற்கோ, அவர்களுக்கு உயிர் இழப்புக்கள் ஏற்படுவதற்கோ நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
உணர்ச்சிக் கோஷங்களால் உங்களை உசுப்பேற்றுவதற்கு  வரும் பாரம்பரிய அரசியல்வாதிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.  நீங்கள் அளிக்கும் வாக்குகளே அவர்களை கடந்த 66 வருடங்களாக வாழவைக்கின்றது. அவர்கள் தாங்கள் பிழைப்புக்கு வழிதேடவே உங்களுக்கு உணர்ச்சியூட்டுகின்றனர். ஆனால், நீங்கள் ஏமாறக்கூடாது.

இலவசக் கல்வி, சுகாதார சேவைகள், சமூக சேவைகள், சமுர்த்தி என்று எல்லாவற்றையுமே அரசாங்கமே உங்களுக்கு தருகின்றது. ஆனால், உணர்ச்சியூட்டும் இப்பாரம்பரிய அரசியல்வாதிகளால் உங்களுக்கு எதனைத்தான் பெற்றுத்தர முடியும்?

தேர்தல் காலத்தில் மட்டும் உங்கள் காலடி தேடிவந்து உணர்ச்சியூட்டும் அரசியல்வாதிகள், பின்னர் உங்கள் வாக்குகளை சூறையாடிக்கொண்டு மாயமாக மறைந்து, பின்னர் அடுத்த தேர்;தலுக்கு வருகின்றனர்.

எமது பிள்ளைகளுக்கான இலவசக் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சமூகசேவைத்திட்டங்கள், நலன்புரி வசதிகள், வேலைவாய்ப்பு என்று எத்தனையோ விதமான அரச சேவைகளை நாம் அனுபவிக்கின்றோம்.

இப்பொழுது மட்டக்களப்பு மாவட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு தமிழ்ப் பிரதியமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரனே உள்ளார். அவரைக்கூட நீங்கள் தெரிவுசெய்யவில்லை.

தமிழ் மக்களுக்குச் சேவை செய்யவேண்டுமென்பதற்காக அரசாங்கம் அவரைப் பிரதியமைச்சராக நியமித்து அவருக்கூடாக பல கோடி ரூபாய்களை ஒதுக்கி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  கிராமங்களை அபிவிருத்தி செய்கின்றது.

எனவே, எதிர்காலத்தில் நன்கு சிந்தித்து எமக்கு சேவை செய்பவர்களையும் எம்மை ஏமாற்றி உணர்ச்சியூட்டி வாக்குகளை சூறையாடிச் செல்பவர்களையும் இனங்கண்டு வாக்களியுங்கள். அதன் மூலமே உங்கள் பிரதேசம் வளர்ச்சியடையும்.' என்றார்.

பொண்டுகள்சேனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கிளையின் தலைவராக ராமநாதன் அருணதாஸ், செயலாளராக கலைச்செல்வன் நந்தினி, பொருளாளர் சுப்பிரமணியம் நாகராசா, உபதலைவர் தருமலிங்கம் சோமநாதன் உபசெயலாளர் மயிலாப்போடி சண்முகராசா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X