2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பின்தங்கிய கிராமங்களின் தேவைகளை பூர்த்திசெய்ய குழுக்கள் ஸ்தாபிப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்தித் தேவைகளை பூர்த்திசெய்ய கிராம மக்களை உள்ளடக்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளர் பேர்ட்டி பெரேரா தெரிவித்தார்.

பெரிய புல்லுமலைக் கிராமத்தில் நேற்று புதன்கிழமை (15)  கிராம மக்களை உள்ளடக்கிய அபிவிருத்திக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.  இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

"யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நீண்டகாலம் அகதிகளாக வாழ்ந்து, இப்பொழுது தங்களது சொந்த இடத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கின்ற  பெரியபுல்லுமலை கிராம மக்களை  பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு தாம் முயற்சிக்கின்றோம். 

உங்கள் கிராமத்தின் அபிவிருத்தி பற்றி சிந்தித்து செயற்;படக்கூடிய குழுவை ஸ்தாபிப்பதன் மூலம் பின்தங்கிய நிலையிலுள்ள பெரியபுல்லுமலை கிராம மக்களின் உண்மையான தேவைகளையும் பிரச்சினைகளையும் இனங்கண்டு நீங்கள் உங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும். இது உங்கள் முன்னேற்றத்துக்காகவும் சுபீட்சமான எதிர்காலத்துக்காகவும் எடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்களாகும்' என்றார்.

இதன்போது மின்சார வசதி, போக்குவரத்துச் சீர்கேடு, குடிநீர்த் தட்டுப்பாடு, காட்டுயானைகளின் இடைவிடாத தொல்லை மற்றும் வீடில்லாப் பிரச்சினைகளையும் காணி உறுதிகள் இல்லாததால் தங்களுக்கு எதுவிதமான உதவிகளும் கிட்டவில்லை என்பதையும் பெரியபுல்லுமலை கிராம மக்கள் முன்வைத்தனர்.

பெரியபுல்லுமலைக்குளம், மீகஹகண்டிகுளம் ஆகியவை புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு தரப்பட்டால் பெரியபுல்லுமலை மற்றும் கொஸ்கொல்ல, கோப்பாவெளி போன்ற ஒதுக்குப்புறக் கிராமங்களின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை இல்லாமல் செய்யலாம். அத்துடன், மீன்பிடி மூலம் வாழ்வாதாரத்தையும் தேடிக்கொள்ளலாம் என்றும் இந்த மக்கள் கூறினர்.

சமீபத்தில் நிலவிய கடும் வரட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பெரியபுல்லுமலைக் கிராமத்துக்கு இதுவரை வரட்சி நிவாரணம் எதுவும் கிட்டவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.

பெரியபுல்லுமலை கிராம சேவகர் பிரிவில் அடங்கும் அம்கஹவத்த, கொஸ்கொல்ல, கொச்சித்தோட்டம், ஏற்றம் மற்றும் பெரியபுல்லுமலை ஆகிய கிராமங்களில் யுத்தத்தினால் அகதிகளான தமிழ், சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த 130 குடும்பங்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

பெரியபுல்லுமலைக் கிராமத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவராக ஏ.ரகுநாதன், செயலாளராக பி.கே.செல்வராசா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X