2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சுன்னத் வல் ஜமா அத் உலமாக்கள் மாநாட்டை நாம் ஆட்சேபிக்கின்றோம்: ஸஹ்றான்

Gavitha   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியில் நடைபெறும் சுன்னத் வல் ஜமா அத் உலமாக்கள் மாநாட்டை நாம் ஆட்சேபிக்கின்றோம் என தேசிய தௌஹீத் ஜமா அத்தின் உப தலைவர் மௌலவி எம்.சி.எம்.ஸஹ்றான் மஸ்ஊதி தெரிவித்தார்.

தேசிய தௌஹீத் ஜமா அத் வெள்ளிக்கிழமை (18) காத்தான்குடியிலுள்ள அதன் தலைமையகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தினால், காத்தான்குடி ஐந்து பத்ரிய்யா ஜும் ஆ பள்ளிவாயலில், இரண்டு நாட்கள் ஸூன்னத் வல் ஜமா அத் உலமாக்கள் மாநாட்டையும் திங்கட்கிழமை ஸூன்னத் வல் ஜமா அத் கொள்கை விளக்க கூட்டமொன்றையும் நடாத்துகின்றனர்.

இவர்கள், அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமா அத் என்ற பெயரைப் பயன்படுத்தி இறைவனுக்கு இணை கற்பிக்கும் அத்வைத மாநாட்டையே நடாத்துகின்றனர்.

இதனால் இந்த மாநாட்டை எமது தேசிய தௌஹீத் ஜமா அத் கண்டிக்கின்றது. இந்த மாநட்டில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ள சேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் பெர்லவிசக் கொள்கையைச் சேர்ந்தவர்.

அப்துல்லாஹ் ஜமாலிக்கு விவாதிக்க முன்வருவீர்களான என்ற தலைப்பில் ஒரு கடிதமொன்றை எமது தேசிய தௌஹீத் ஜமாஅத்தினால் அனுப்பி வைத்தோம்.

அவருடன் நான் தொலைபேசியில் உரையாடியதன் பின்னர் அவருடைய மின்னஞ்சலுக்கு அனுப்பினோம். ஆனால் அவர் அதற்கு எந்த பதிலும் எமக்கு அனுப்பவில்லை. மௌலவி அப்துர் றவூப் இஸ்லாத்தின் பெயரால் துணிந்து பொய் சொல்வதோடு, பொய் ஹதீஸ்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்பதை கடந்த பல மாதங்களாக நாம் நிரூபித்து வந்துள்ளோம்.

இது தொடர்பில் மௌலவி அப்துர் றவூப் நிரூபிப்பாரா எனும் தலைப்பில் 25 இறுவெட்டுகளை வெளியிட்டுள்ளோம். 417 பொய்களை அவரின் வாக்கு மூலத்துடனேயே நாம் வெளிக் கொணர்ந்துள்ளோம்.

இதனால் உண்மையை விளங்கிக் கொண்ட பலர், மௌலவி அப்துர் றவூப்பின் கொள்கையை விட்டு விலகி எம்மோடு இணைந்து வருகின்றனர்.
இதுவரை நாம் முன் வைத்த குற்றச்சாட்டுக்களை அவர் நிரூபிக்க முன்வரவில்லை. மௌலவி அப்துர் றவூப்புக்கும் எங்களுக்குமிடையில் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது.

இஸ்லாமிய அகீதாவுக்கு முரணாக அவர் கொண்டுள்ள கொள்கைதான் பிரச்சினையாகும். இன்று அப்துர் றவூப் மௌலவிக்கு, ஆதரவு குறைந்து விட்டது. அவரின் கந்தூரிகளுக்கு இப்போது மக்கள் செல்வதில்லை.

அவரின் ஆதரவாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இவ்வாறான ஒரு மாநாட்டை நடாத்துகின்றார். எங்களை அந்த மாநாட்டுக்கு அழைத்திருந்தால், எங்களது ஜமாஅத் உலமாக்கள் போய் இருப்போம். நாங்கள் கேள்விகளைக் கேட்டிருப்போம்.

அந்த மாநாடு முடியும் வரைக்கும் நாங்கள் கருத்து ரீதியாக மக்களை தெளிவூட்டும் வேலைகளை மேற்கொள்வோம். மாறாக நாங்கள் வன்முறையைத் தூண்டுபவர்கள் அல்ல.

எல்லோருக்கும் இந்த நாட்டில் கருத்துச் சொல்வதற்கு உரிமையுண்டு. நாங்கள் யாரையும் மாநாட்டுக்கு செல்லவேண்டாம் என்று தடுக்க வில்லை. கருத்தை யாரும் கேட்கலாம்.

300 உலமாக்களோடல்ல மூவாயிரம் உலமாக்களுடனும் இது தொடர்பில் பேசுவதற்கு ஆயத்தமாக உள்ளோம். நாங்கள் சத்தியத்தைச் பேசுகின்றோம். எங்களுக்குப் பணப்பலம், அரசியல் பலம் கிடையாது.

நாங்கள் சத்தியத்தைப் பேசுவதால் அல்லாஹ்வின் உதவியுண்டு என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் மௌலவி ஏ.எல.எம்.ஸாபி,

நேர்மையின் பால் அறவூட்டும் வேலையினை எமது தேசிய தௌஹீத்
ஜமா அத் செய்து வருகின்றது.

நாங்கள் அந்த மாநாட்டை குழப்ப உள்ளதாகவும் மாநாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாகவும் எங்கள் மீது சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யவோ, அல்லது குழப்பத்தை ஏற்படுத்தவோ மாட்டோம்.
நாங்கள் ஜனநாயகத்தை மதிப்பதுடன், இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்குள் நின்று செயற்படுபவர்கள், சட்டத்தை மதிக்கின்றோம். ஜனநாயக ரீதியாக எமது சத்தியப் பிரச்சாரத்தை கொண்டு செல்கின்றோம்.

நாங்கள் மொட்டை நோட்டீஸ் அடிப்பவர்களல்ல. சத்தியத்தை துணிந்து நின்று கூறுபவர்கள். எல்லோருக்கும் அவரது கருத்துக்களை கூறுவதற்கு சுதந்திரமுண்டு. அந்த வகையில் மௌலவி அப்துர் றவூப் தரப்பினர், அவர்களின் மாநாட்டு விளம்பர பிரசுரத்தை போஸ்டரை எமது ஜமா அத் தலைமையகத்துக்கு முன்னாலேயே ஒட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

ஒரு போதும் அதை நாங்கள் கிழிக்கவில்லை. அது அவர்களின் சுதந்திரம். ஆனால் எமது ஜமா அத்தினர் நேற்றிரவு எமது மாநாட்டு போஸ்டரை ஒட்டச் சென்ற போது எமது ஜமாஅத்தினரை அச்சுறுத்தியுள்ளனர்.

அதேபோன்று எங்களுக்கு எதிராக பொய்யாக 119 பொலிஸ் இலக்கத்துக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி எம்மைப்பற்றி தவறாக கூறியுள்ளனர். எங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

நாங்கள் குறுக்கு வழியில் போகமாட்டோம். நேரான வழியிலேயே செல்வோம் ஆதாரத்துடன் தான் பேசுவோம் என அவர் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய தௌஹீத் ஜமா அத்தின் செயலாளர் மௌலவி எம்.சி.எம்.ஸைனீ, உப செயலாளர் எம்.வை.எம்.தௌபீக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதே வேளை குறித்த ஸூன்னத் வல் ஜமா அத் உலமாக்களின் மாநாடு சனிக்கிழமை (18) காத்தான்குடி பத்ரிய்யா ஜும் ஆ பள்ளிவாயல் மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X