2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மு.கா. தீர்க்கதரிசமான முடிவுகளை எடுக்க வேண்டும்: றம்ழான்

Gavitha   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்களின் மனநிலையை புரிந்து கொண்டு, தீர்க்கதரிசனமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (20) அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த காலத்தில் இந்த ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல்வேறுபட்ட மத, கலாசார, வர்த்தக மற்றும் உரிமைகள் போன்ற விடயங்களில், பாரிய அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு உயிர்களையும் பல கோடி ரூபாய் பெறுமதியான உடமைகளையும் இழந்து, அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு இருக்கமான காலகட்டத்தில், வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்சபீடம் மிகவும் நிதானமான சாதக பாதகங்களை விரிவாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்த ஆட்சியின் பங்காளிக்கட்சியாகவும் பொறுப்பு வாய்ந்த நீதி மற்றும் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருந்த போதிலும், முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறையையும் அநீதியையும் தடுத்து நிறுத்த முடியாமல் போனது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சிக் காலத்தில் தான் என்பதை, கட்சித்தலைமை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

அது மாத்திரமல்லாது, இந்நாட்டில் வசிக்கும் ஒரு சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம் சமூகத்துக்கு, எதிராக மேற்கொள்ளப்;பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் அடக்கு முறைகள் மற்றும் அநீதிகளை தடுத்து நிறுத்துவதற்கு, ஜனாதிபதி எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை தான் என்னவென்ற வினாவுக்கும் விடை கண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

கட்சியின் தீர்மானம் எதுவும் இல்லாமல், கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் மிகப்பொறுப்பு வாய்ந்த ஒரு சிலர், தங்களது சுயநலன்களுக்காக பொறுப்பற்ற வகையில் பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஆட்சியாளர்களை திருப்திபடுத்தும் அறிக்கைகளை விட்டு கட்சியையும் முஸ்லிம்களையும் காட்டிக் கொடுப்பதை உடன் நிறுத்த வேண்டும்.

கட்சியின் தீர்மானம் இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் அறிக்கைகளை விட்டு, ஆட்சியாளர்களின் ஆசிர்வாதங்களை பெறுகின்றவர்கள் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான மனநிலையை புரிந்து கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும். தங்களது அமைச்சுப் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்கு, முஸ்லிம்களை எவரும் அடகு வைக்கக் கூடாது.

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் பாரிய அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது வாய்மூடி மௌனியாக இருந்தவர்கள், இன்று முஸ்லிம்களின் வாக்குகளை ஆட்சியாளர்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதில், மிகவும் மும்முரமாக போட்டி போட்டுக் கொண்டு அறிக்கை விடுவதையும் விராம்பு பேசுவதையும் உடன் நிறுத்த வேண்டும். இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பேரம் பேசும் சக்தியை இழக்க நேரிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும், அதனால் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கப்போகும் நன்மை தான் என்ன என்பதை முதலில் கட்சியின் தலைமை, உரிய முறையில் கட்சியின் உள்ளூர் அரசியல் தலைமைகளுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கின்ற முடிவானது, மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை ஏற்படுத்தி விடக் கூடாது.
மிகவும் நிதானமாக தீர்க்கதரிசனமான முடிவினை எடுக்கத் தவறினால் முஸ்லிம் காங்கிரஸ் எதிர் காலத்தில் மிகவும் பலவீனப்படுத்தப்பட்டு, முஸ்லிம் சமூகத்திலிருந்து ஓரம் கட்டப்படுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போகும் என்பதை கட்சித் தலைமை நன்கு புரிந்து கொண்டு, அவர்களது தீர்மானத்தினை எடுக்க வேண்டும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X