2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கையில் முதல் தடவையாக சூபிச உலமாக்களுக்கான உலமா சபை

Gavitha   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கையில் முதல் தடவையாக சூபிச உலமாக்களைக் கொண்ட உலமா சபை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் கடந்த இரண்டு தினங்கள் நடைபெற்ற ஸூன்னத் வல் ஜமா அத் உலமாக்கள் மாநாட்டின் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு நடைபெற்ற இறுதி அமர்வின் போதே, இந்த சூபிச உலமாக்களைக் கொண்ட உலமா சபை ஆரம்பிக்கப்பட்டது.

அகில இலங்கை ஸூன்னத் வல் ஜமா அத் சூபிச உலமாக்கள் சபை என இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக, அகில இலங்கை ஸூன்னத் வல் ஜமா அத் சூபிச உலமாக்கள் சபையின் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எல்.ஏ.எம்.காஸீம் பலாஹி தெரிவித்தார்.

காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி பத்ரிய்யாஹ் ஜும் ஆப் பள்ளிவாயல் மண்டபத்தில், கடந்த சனிக்கிழமை (18) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (19) ஆகிய இரு தினங்களிலும் அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தினால், ஸூன்னத் வல் ஜமா அத் உலமாக்கள் மாநாடு நடைபெற்றது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அகில இலங்கை ஸூன்னத் வல் ஜமா அத் சூபிச உலமாக்கள் சபையின் தலைவராக, மௌலவி ஏ.ஜே.அப்துர் றவூப் மிஸ்பாஹியும் பொதுச் செயலாளராக மௌலவி எம்.எல்.ஏ.எம்.காசீம் பலாஹி, (காத்தான்குடி) உப தலைவர்களாக மௌலவி ஏ.றபியுதீன் ஜமாலி (அட்டாளைச்சேனை) மௌலவி எம்.ஏ.மஜீத் (ஏறாவூர், காதீநீதிபதி), மௌலவி எம்.முஹாஜரீன் (மாத்தளை) உப செயலாளர்களாக மௌலவி ஏ.சி.எம்.றிபாய் பலாஹி (காங்கேயனோடை), மௌலவி என்.எம்.நவாஸ் அத்லி (மாவனல்ல), மௌலவி எம்.புவாத் அத்லி (கல்முனை), பொருளாளராக மௌலவி கே.ஆர்.எம்.ஸஹ்லான் றப்பானி (காத்தான்குடி) ஆகியோர் உட்பட 24 உலமாக்களை நிருவாக சபை உறுப்பினர்களா கொண்டு, இந்த சூபிச உலமாக்கள் சபை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
இம்மாநட்டின் இறுதியில், இலங்கை நாடு பல்லின மக்களும் ஒன்றாக வாழும் ஒரு நாடாகும். இங்கு  தற்போதைய நிலையில் பொது மக்களை சாத்விகத்தின் பால் வழிகாட்டவும் ஒற்றுமை,  புரிந்துணர்வு, சமாதானம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு என்பவற்றை முஸ்லிம்களுக்கும் பிற சமூகத்தவர்களுக்கும் போதிக்கவும் வேண்டியுள்ளது. அத்துடன் பிற சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தவறான எண்ணங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன் மூலமே நம் நாட்டில் நிரந்தரமான சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்பன உட்பட 24 அம்சங்களைக் கொண்ட பிரகடனும் வெளியிடப்பட்டது.

இந்த பிரகடனத்தை மாநாட்டு தலைவர் மௌலவி எச்.எம்.எம்.இப்றாகீம் நத்வீ வெளியீட்டு வைக்க, மாநாட்டில் கலந்து கொண்ட ஸூன்னத் வல் ஜமா அத் உலமாக்கள் தக்பீர் கூறி அந்த பிரகடனத்தை ஏற்றுக் கொண்டனர்.

இதன் போது மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு, மௌலவி ஏ.ஜே.அப்துர் றவூப் மிஸ்பாஹி சான்றிதழ்களையும் மாநாட்டு நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X