2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காட்டுயானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 


மட்டக்களப்பு மாவட்டத்தின் விவேகானந்தபுரம் கிராமத்தினுள் நேற்று திங்கட்கிழமை அதிகாலை புகுந்த காட்டுயானையொன்று  குடும்பஸ்தர் ஒருவரை தாக்கியதுடன், பாடசாலையொன்றுக்கும் சேதமேற்படுத்தியது. இந்நிலையில், காட்டுயானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துமாறு கோரி இக்கிராமத்திலுள்ள வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு முன்பாக  பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுயானையின் தாக்குதலில் படுகாயமமைந்த இராசநாயகம் மோகனதாஸ் (வயது 34) என்பவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்கு மாற்றப்பட்டதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியாசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

இதேவேளை, மட். நவகிரி நகர் அகத்தியர் வித்தியாலய சுற்றுவேலியின் ஒருபகுதியையும் கட்டடமொன்றையும் சிறுவர் முற்றத்தையும் காட்டுயானைகள் சேதப்படுத்தியதாக வித்தியாலய பிரதி அதிபர் அ.தனுராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில், காட்டுயானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துமாறும்  யானைகளை மக்கள் குடியிருப்புக்களிலிருந்து அகற்றுமாறும் இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள்   துரிததாக செயற்படுமாறும்  கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் சுற்றுவட்ட அதிகாரி பி.ஜெகதீசன்,  'இங்கிருந்துகொண்டு இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக நாங்கள் கடமையாற்றுகிறோம். எமக்கு ஆளணி மற்றும் வாகனப் பற்றாக்குறை நிலவுகின்றன. இதனால், எமது பணி  தாமதமாகின்றது' எனக் கூறினார்.

இவ்வாறிருக்க, காட்டுயானைகள் சேதப்படுத்திய இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை  சென்று பார்வையிட்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X